வருடம் 2004
அப்போது நான் எனது வசிப்பிடத்திலிருந்து 110 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சிபள்ளியில் படித்து வந்தேன். தினந்தோறும் ரயில் மூலமாக காலையும், மாலையும் பயணம்.
ஒரு நாள் காலை வழக்கம் போல் சக ரயில் நண்பர்களுடன் சந்தோஷமாக அரட்டை அடித்துக்கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கையில் நாங்கள் பயணம் செய்து வந்த ரயில் ஜங்க்ஷனில் நின்று மீண்டும் கிளம்ப ஆரம்பித்தது. அப்போது வேகமெடுக்கத் துவங்கிய ரயிலினை ஓடிப்பிடித்து, ஒரு போலீஸ்காரர் எங்கள் பெட்டியில் ஏற வந்தார். எங்கள் பெட்டியில் படியருகே நின்றவர்களும் அவருக்கு கை கொடுத்து பெட்டியின் உள்ளே இழுத்து கொண்டனர்.
அவர் ஏறி முடிக்கவும் ரயில் முழு வேகமெடுக்கவும் சரியாக இருந்தது. இது போல் வேறு ஒருவர் ஓடும் ரயிலில் ஏறியிருந்தால் எங்களின் நண்பர்கள் உட்பட அனைவருமே அறிவுரை என்ற பெயரில் கேவலமாக திட்டுவதை பலமுறை பார்த்து இருக்கிறேன். ஆனால் இவரோ போலீஸ்காரர்! அதனால் மிக லேசான குரலில் அறிவுரையாக மட்டுமே ஒரு சிலர் பேசினர்.
அப்போது தான் அவரை பார்த்தேன். வயது 50 இருக்கலாம். சற்று மாநிறத்திலும், கிரேடு 3 தொப்பையுடனும், சாதாரண மீசையை வைத்துக்கொண்டும் இருந்தார். ஓடி வந்து ஏறியதில் அவர் மூச்சு வாங்கியபடி இருந்தார். நான் எழுந்துகொண்டு ”எனது இருக்கையில் உட்காருங்கள்” என்றேன். அவரோ தான் உட்கார்ந்து கொண்டு சைகையாலேயே என்னையும் உட்காரச் செய்தார். இருப்பினும் அவருக்கு மூச்சு வாங்கி கொண்டே இருந்தது. உடலெங்கும் வியர்வை பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருந்தது. இரண்டு நிமிடம் கடந்த நிலையில் என் மீது சாய்ந்து கொண்டார். அவர் ஓய்வெடுத்துக்கொள்ளட்டும், என நான் நினைத்தகொண்டிருந்த போது அப்படியே சுய நினைவின்றி எனது மடியில் மயங்கி விழுந்தார்.
நான் என்ன செய்வது என தெரியாமல் விழித்தேன். எனதருகில் இருந்தவர்கள் அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்தனர். சட்டை பட்டன்களை கழட்டி ஆசுவாசப்படுத்தினார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. ஒரு பெரியவர் வந்து அவரை தொட்டு பார்த்து ”ஹார்ட் அட்டாக் போல இருக்கு” என கூறினார். அதற்குள் அடுத்த ஜங்ஷன் வரவே அனைவரும் சேர்ந்து அவரை இறக்கி நடைபாதையில் உள்ள ஒரு மேடையில் படுக்க வைத்தோம். நான் ஓடிச் சென்று அந்த ஜங்ஷனில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டரிடம் விஷயத்தை கூறினேன். அவர் வந்து பார்த்து ”போயிடுச்சு” என்று சாதாரணமாக கூறினார்.
அதே நேரம் நாங்கள் பயணித்த ரயில் கிளம்ப ஆரம்பித்தது. அனைத்து பயணிகளும் ஏறிக்கொண்டனர். சக நண்பர்களும் ஏறிக்கொண்டனர். நான் என்ன செய்வது என தெறியாமல் விழிக்க அந்த ஸ்டேஷன் மாஸ்டர் ”போப்பா! ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்றோம்!, உன் ரயில் கிளம்புது பார்.” என்றார்.
நான் மெதுவாக கிளம்பிய ரயிலை பார்த்தேன். நண்பர்கள் வந்து ஏறுமாறு கத்தினார்கள். எனது மடியிலேயே உயிர் துறந்த யாரோ ஒரு மனிதனையும் பார்த்தேன். ஸ்டேஷன் மாஸ்டரையும் பார்த்தேன். ”எப்படியாவது இவரை காப்பாத்துங்கள் சார்” என்று கூறிக்கொண்டே ஓடிச் சென்று ரயிலில் ஏறி விட்டேன். எனது பெட்டியே அமைதியாக இருந்தது. ”அந்த போலீஸ்காரருக்கும் என்னைப் போல் ஒரு மகனோ அல்லது மகளோ இருந்திருக்கலாம்! அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆனவர்களோ!, இல்லையோ! வீடு கட்ட வாங்கிய கடன்களை எல்லாம் அடைத்திருப்பாரோ இல்லையோ!” என எத்தனையோ வருத்தங்கள் எனது மனதில். ஆனால் நான் ரயிலை விட்டு இறங்கி அவருடனே இருந்து அவர் குடும்பத்திற்கு தகவல் கூறியிருக்கலாமோ! என்று என் மீதே எனக்கு கோபம். ஆனால் என்ன செய்ய?
வருடம் 2014
டெட் தேர்வினை மிக கடினமாக படித்து எழுதினேன். 89 மதிப்பெண் எடுத்து தோல்வியுற்றேன். என்னுடன் ஒன்றாக குரூப் ஸ்டடி செய்த நண்பன்(?) 90 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று விட்டான். ஆனால் அவனுக்கு தான் என்ன மரியாதை! ஏதோ வேலையே கிடைத்து விட்டது போல! எங்கள் குழுவில் உள்ள தேர்ச்சி பெற்றவர்கள் எங்களிடம் பேச்சை சிறிது குறைத்துக்கொண்டார்கள். அவர்களின் கண்களில் முதலமைச்சர் கையால் பணி ஆணை பெறும் இறுமாப்பு தெரிந்தது. மீண்டும் முயற்சி செய்தால் நாங்கள் இதை விட அதிக மதிப்பெண் நிச்சயம் பெறுவோம்!. ஆனால் 1 மதிப்பெண் குறைந்ததால் அடுத்த தேர்வு வரை வீட்டில் உள்ளவர்களையும், இந்த சமூகத்திலும் நாங்கள் ஏதோ முட்டாள்கள் போல சித்தரிக்கப்படுவதை எவ்வாறு தாங்கிக்கொள்வது என்ற பயம் தான் எங்கள் கண்களில் தெரிந்தது.
யார் செய்த புண்ணியமோ! மதிப்பெண் தளர்வு கிடைத்து இன்று நாங்களும் தேர்ச்சி பெற்று விட்டோம்! பணி இப்போது கிடைக்கிறது (அல்லது) பிறகு கிடைக்கிறது, கிடைக்கும் போது கிடைக்கட்டும். ஆனால் இப்போது நாங்களும் தகுதி பெற்று விட்டோம்! இந்த ஒன்றே இப்போதைக்கு போதும். நீதிமன்றத்தின் புதிய வழிகாட்டிலின் படி ஓரளவிற்று நல்ல வெயிட்டேஜ் இருப்பதால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
ஆனால் 2012 ல் தேர்வெழுதியவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? இதற்கு முந்தைய 10 தேர்வுகளுக்கா மதிப்பெண் தளர்வு கேட்டார்கள்? ஒரே ஒரு தேர்வு மட்டும் தானே. 76000 பேர் தேர்ச்சி பெறும்போது மேலும் ஒரு 25000 பேர் தேர்ச்சி பெறுவதால் பெரிதாக என்ன நடந்து விடப்போகிறது. தேர்ச்சி பெற்றவர்களின் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் வெயிட்டேஜ் கிடைக்கும் போது இவர்களும் தான் வரட்டுமே. இலங்கையில் சகோதரன் இறந்தால் அதற்கு போராடக்கூடாது. அது அடுத்த நாட்டின் இறையாண்மையை மீறிய செயல். அதேபோல் நீதிமன்ற தீர்ப்பையும் விமர்சிப்பது தவறு. இங்கு விமர்சிக்க வில்லை. இந்த தமிழக அரசு அவர்களுக்கும் மதிப்பெண் தளர்வு வழங்கினால் இதே நீதிமன்றம் ”அரசின் கொள்கை முடிவில் தலையிடாது” என அப்போதும் ஒதுங்கியிருக்கும். பாவம்! 2012ல் தேர்வெழுதிய எங்கள் சகோதர சகோதரிகள்! தேர்ச்சி பெற்று விட்ட ஒரே காரணத்திற்காக, ”அடுத்த தேர்வுக்கு இப்போதிருந்தே படி!” என இறுமாப்பில் தயவு செய்து இவர்களை திட்டாதீர்கள்!
எங்கள் ரயில் கிளம்பி விட்டது! எனது மடியில் உயிர் விட்ட யாரோ முகம் தெரியாத போலீஸ்காரரை பற்றிய வருத்தம் தற்போதும் எனக்கு உள்ளது.
எங்கள் ரயில் கிளம்பி விட்டது! ஆனால் 2012 ல் தேர்வெழுதிய என் நண்பர்களை நினைத்து அழுவதை தவிர நான் வேறு என்ன செய்து விட முடியும். எங்களைப்போல அவர்களுக்கும் நீதி கிடைக்கட்டுமே! என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம்!..
அழுதுகொண்டே, வேகமெடுத்த எங்களுக்கான ரயிலில் ஏறிக்கொள்கிறோம்!
இறைவா! இவர்களையும் காப்பாற்றி விடு! Please...
கட்டுரையாளர்: திரு. சிந்தி
No comments:
Post a Comment