நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததால் பகுதி நேர ஆசிரியர்கள் 8 பேர், பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எஸ்எஸ்ஏ திட்டத்தின் கீழ் 8,612 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் கலை ஆசிரியர்களாக மட்டும் 3,620 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களை முழுநேர ஆசிரியர்களாக நியமித்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த 2 வருடங்களாக பல்வேறு சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் இதற்கு உத்தரவாதம் அளிக்கும் கட்சிக்கு, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்கம் ஆதரவு என அறிவித்தது. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி, தனது தேர்தல் அறிக்கையில் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவித்தது.
இதையடுத்து சங்க நிர்வாகிகள், கடந்த ஏப்ரல் 18ம் தேதி, கோவையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் 8 ஆசிரியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக கலைஆசிரியர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினை கோவையில் சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். இந்நிலையில் ஜூன் 2ம் தேதி கோத்தகிரி அரசு பள்ளியில் கலைஆசிரியராக பணியாற்றி வரும் சங்கத்தின் மாநிலத் தலைவரான என்னை பணிநீக்கம் செய்து கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கான காரணம் கேட்டபோது, தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதற்கடுத்து ஜூன் 4ம் தேதி காஞ்சிபுரத்தில் சங்கரநாராயணன், கன்னியாகுமரியில் விஜயகுமாரி, திருவண்ணாமலையில் ராமச்சந்திரன், ஜூன் 5ம் தேதி சிவகங்கையில் மணிவாசகன், திருச்சியில் முருகேசன், ஜூன் 13ம் தேதி கரூரில் நடராஜபெருமாள், விழுப்புரத்தில் பால்பாண்டியன் என கலை ஆசிரியராக பணியாற்றி வந்த 8 பேரை பணிநீக்கம் செய்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரும், சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள். ஏற்கனவே சொற்ப சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டி வரும் எங்கள் மீது, அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை வேதனையை தருகிறது. எனவே இதை எதிர்த்து விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். இவ்வாறு ராஜ்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment