திருச்சியில் அரசு ஊழியர்களுக்கு தகவல் உரிமை சட்டம் குறித்த பயிற்சி முகாமை அண்ணா மேலாண்மை நிலைய இயக்குனர் வெ.இறையன்பு தொடங்கிவைத்தார்.
மண்டல மையங்கள்
இதுகுறித்து அண்ணா மேலாண்மை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
அண்ணா மேலாண்மை நிலையத்தின் சார்பில் சென்னையில் அரசு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதிதாக நியமிக்கப்படும் அரசு ஊழியருக்கு பவானிசாகரில் அடிப்படை பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.
முதல்–அமைச்சர் உத்தரவின் பேரில், அண்ணா மேலாண்மை நிலையத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள அரசு பணியாளர்களுக்கு பல புத்தாக்க பயிற்சிகளை அளிப்பதற்கான மூன்று மண்டல மையங்களை அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.
கலெக்டர் பரிந்துரை
திருச்சி, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள மையங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான ஒரு பயிற்சி திட்டம், ஒவ்வொரு மாதமும் மாவட்ட கலெக்டர் பரிந்துரையின் பேரில் வழங்கப்படும். இதற்காகும் செலவு முழுவதையும் அண்ணா மேலாண்மை நிலையம் ஏற்றுக்கொள்ளும்.
திருச்சி மண்டலத்தில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அடங்கும். இந்த மாவட்ட கலெக்டர்களின் பரிந்துரையின்படி, தேவையான அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
பயிற்சி வகுப்புகள்
வழக்கு மேலாண்மை, தகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை பண்புகள், மன அழுத்த மேலாண்மை, பணிப்பண்பாடு, அலுவலக நிர்வாகம், ஒழுங்கு நடவடிக்கை, பணி விதிகள், நேர நிர்வாகம் போன்ற தலைப்புகளில் மாவட்ட தலைமையிடத்திலேயே இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
இதன் மூலம் அரசு பணியாளர்கள் தங்கள் பணியினை மேலும் சிறப்பாக செய்ய முடியும். முதற்கட்டமாக 19–ந் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களுக்கு நேர நிர்வாகம் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
தொடங்கிவைத்தார்
திருச்சி மாவட்டத்தில் தகவல் உரிமை சட்டம் குறித்த இருநாள் பயிற்சி 23–ந் தேதி (நேற்று) தொடங்கியது. திருச்சி கலையரங்கம் கூட்ட மன்றத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமை தாங்கினார்.
இருநாள் பயிற்சியை அண்ணா மேலாண்மை நிலைய இயக்குனர் வெ.இறையன்பு தொடங்கிவைத்தார். தகவல் உரிமை சட்ட முன்னாள் ஆணையர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். தகவல் உரிமை சட்டத்திற்கான தகவல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் பணியாளர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment