சேந்தமங்கலம் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியை, தனிநபர் ஆக்கிரமித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பள்ளிக் குழந்தைகள், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து எல்லையில், எஸ்.பி.எம்., அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. 1915ம் ஆண்டு தனியாரால் துவங்கப்பட்டு, தற்போது, மாவட்ட தொடக்கக் கல்வி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில், இயங்கி வருகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, சேந்தமங்கலம் டவுன், காந்திபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த, 33 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பள்ளியில், போதுமான வகுப்பறை இருந்தும், அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், பத்தாண்டாக, அதே பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவர், பள்ளி வளாகத்தில் விடுதி நடத்தி, மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துவதாக கூறி, பள்ளியின் ஐந்து வகுப்பறையில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதனால், தொடர்ந்து தனிநபர் ஆக்கிரமிப்பில், அரசு உதவி பெறும் பள்ளி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள், கிராம கல்வி குழு தலைவர், ஆசிரியர், பி.டி.ஏ., நிர்வாகத்தினர் என பல்வேறு தரப்பினர் மூலம், மாவட்ட கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம், பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற முடியாத நிலையே நீடிக்கிறது. அதனால், பள்ளி குழந்தைகள், சுதந்திரமாக பள்ளியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வகுப்பறையை, சாந்தகுமார் ஆக்கிரமித்துள்ளதால், மாணவரும், ஆசிரியரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி, குழந்தைகளுக்கான போதுமான வசதியை ஏற்படுத்தி தர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிராம கல்விக் குழு தலைவர் சங்கர் கூறியதாவது:
சாந்தகுமார், ஆதரவற்ற குழந்தைகளை பள்ளி வளாகத்தில் பராமரித்து வருவதாக கூறி, பள்ளிக்குள் நுழைந்தார். பின், எவ்வித முறையான அனுமதியும் பெறாததால், அதே இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டார். இதுதொடர்பாக, ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு கூறினார்.
உதவி தொடக்கக் கல்வி அலுவர் வீரமணி கூறியதாவது:
முன்னாள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராஜவேல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேற சாந்தகுமாருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார். ஆனால், அவர் அந்த இடத்தை விட்டு வெளியேறாமல் உள்ளார். மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறைக்கும் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான், முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றினால், வகுப்பறைகள் பராமரிக்கப்பட்டு, குழந்தைகள் படிப்பதற்கான வசதிகள் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment