Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 24 June 2014

மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம்: ஆதரித்து, எதிர்த்து மனுக்கள் தாக்கல்


மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவிப்பது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத்தை அமல்படுத்தக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் அதன் நிர்வாகிகள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் எஸ்.கே.வெங்கடாச்சல பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006-ல் இயற்றப்பட்டது. ஆனால், அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதிகளை தமிழக அரசு இதுவரை உருவாக்கவில்லை. அந்த சட்டமும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை.

இந்தச் சட்டத்தின் நோக்கம் ஒவ்வொரு பள்ளியும் அதன் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு பாடத்தை தமிழில் பயிற்றுவிக்க வேண்டும் என்பதாகும்.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பாடங்களை பயிற்றுவித்து வருகிறது.

மேலும் ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களுக்கு, தமிழ், ஹிந்தி, ஜெர்மன், பிரெஞ்ச் உள்பட பல்வேறு மொழியை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்குகிறது. அதில், பல மாணவர்கள் தமிழ் தவிர இதர மொழிகளை பாடமாக எடுத்து பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பிய கடிதத்தில், 2015-2016-ஆம் ஆண்டிலிருந்து 10 -ஆம் வகுப்பு வரை தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006-ஐ நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. 

அதிகமான மெட்ரிக் பள்ளிகள் தமிழ் மொழியை பயிற்றுவிப்பதில்லை.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ் தவிர இதர மொழிகளை பாடமாக எடுத்துப் பயிலும் மாணவர்கள் படிப்பை கைவிட நேரிடும்.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முடிவு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14-ஐ மீறுவதாகும். எனவே, தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006-ஐ நடைமுறைப்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ஜூன் 10-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006-ஐ நடைமுறைப்படுத்துமாறு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை மற்றும் தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர்கள் நலச் சங்கம் ஆகியவை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்துள்ளன.

இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு திங்கள்கிழமை (ஜூன் 23) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை இரண்டு வாரங்கள் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment