திருச்சி, தேசிய தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் (என்.ஐ.டி.,), 2013-14ம் கல்வி ஆண்டில், 50வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடுகிறது.
என்.ஐ.டி., வளாகத்தில், நேற்று, பொன்விழா ஆண்டு நிறைவு விழா நடந்தது. தமிழக கவர்னர் ரோசய்யா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது: திருச்சி, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. பெல் நிறுவனம், ஆயுத தொழிற்சாலை, அதனுடன் சார்ந்த இயந்திர தொழிற்சாலைகள், ரயில் தொழிற்சாலைகள் இங்குள்ளன. இந்த என்.ஐ.டி.,யின் மூலமாக, நாட்டிற்கு சிறந்த பொறியாளர்கள் கிடைக்கின்றனர். கடந்த, 1964ம் ஆண்டு துவக்கத்தில், மண்டல பொறியியல் கல்லூரியாக துவங்கப்பட்டது. கல்லூரியின் முதல் முதல்வரான மணிசுந்தரம், தொலைநோக்கு பார்வை கொண்டவர். சுதந்திரம் பெற்ற பின், நாட்டில் தொழில்துறை வளர்ச்சிக்கு, இரும்பு சார்ந்த தொழிற்சாலை துவங்கவும், அதற்கான பொறியாளர்களை உருவாக்கவும், பின்னாளில் துவங்கப்பட்ட என்.ஐ.டி.,தான் காரணம். சில ஆண்டுகளில், என்.ஐ.டி., பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த வளர்ச்சியில், வெளிநாடுகளின் பங்குகள் கிடையாது. தொழிற்கல்வித்துறை மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த, மாணவர்கள், ஆசிரியர்கள் அதிகரிக்க வேண்டும்.
என்.ஐ.டி.,யின் தரத்தை உயர்த்தும் நோக்கில், அதன் டைரக்டர்களை அழைத்து, ராஸ்டிரபதி பவனில் விவாதிக்கப்பட்டது. அப்போது, கல்லூரிக்கு தேவையான உட்கட்டமைப்பை விரிவுபடுத்தி, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கேட்டிருந்தனர். அதற்கான, ஆக்கப்பூர்வ பணிகள் நடந்து வருகிறது. திருச்சி என்.ஐ.டி.,க்கும், உலகிலுள்ள மற்ற பல்கலைக்கழகங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தி, மாணவர்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், உலகத்தர வரிசையில் இடம் பெறவும், தொழிற்கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், 'இ கிளாஸ்' முறையில் பாடம் கற்பிக்க வேண்டும். 'கல்வி என்பது, சாதாரண மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவும்' என, சுவாமி விவேகானந்தர் தெரிவித்துள்ளார். எனவே, என்.ஐ.டி.,யில் உருவாகும் பொறியாளர்கள், சமூகத்துக்கும், நாட்டுக்கும் உதவி செய்வர் என்பதில், மாற்றுக்கருத்து இல்லை. இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment