போதிய அடிப்படை வசதிகள் இன்றி, அங்கீகாரமும் இன்றி இயங்கும் பிரீ ஸ்கூல், பிளே ஸ்கூல் போன்ற பள்ளிகளை மூட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:சென்னையில், பிளே ஸ்கூல், பிரீ ஸ்கூல் என்ற பெயர்களில், 760 பள்ளிகள் முறையான அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், விளையாட்டு மைதானம் இல்லை, ஆசிரியர் பற்றாக்குறை என்று பல பிரச்னைகள் உள்ளன.
இந்த பள்ளிகளில், ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது; ரசீதும் தருவதில்லை. கல்வித்துறையோ, தொடக்க கல்வி அலுவலர்களோ, முதன்மை, மாவட்ட, கல்வி அலுவலர்களோ கண்டு கொள்ளவில்லை.
பொது நலன் கருதி, இந்த வகை பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை, நீதிபதிகள் பால் வசந்தகுமார், ரவிச்சந்திரபாபு ஆகியோர் விசாரித்து, பதில் மனு தாக்கல் செய்யுமாறு, கல்வித்துறை செயலர், தொடக்கப்பள்ளிகள் இயக்கக இயக்குனர், சென்னை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment