ஒவ்வொரு ஆண்டும், காமராஜர் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக, அனைத்து வகை பள்ளிகளிலும், கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு, அரசு பள்ளிகளுக்கு நிதி வழங்காததால், பெயரளவிற்கு, நேற்று விழா நடந்தது.
கல்வி வளர்ச்சி:
முந்தைய தி.மு.க., ஆட்சியில், காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, அனைத்து வகை பள்ளிகளிலும், காமராஜர் பிறந்த நாளையொட்டி, முன்கூட்டியே, மாணவ, மாணவியரிடையே, பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட, பல்வேறு போட்டிகள் நடத்தி முடிக்கப்படும். பின், காமராஜர் பிறந்த நாளான, ஜூலை 15ம் தேதி காலை, ஒவ்வொரு பள்ளியிலும், காமராஜர் படம் வைத்து, மாலைகள், மலர்கள் போட்டு, ஆசிரியர், மாணவர் வணங்குவர். அப்போது, கல்விக்காக, காமராஜர் செய்த அரும்பணிகள் குறித்து, ஆசிரியர் விளக்கி கூறுவர்.
பெயரளவிற்கு...:
மேலும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, 100, 200 ரூபாய் மதிப்பில், பரிசு பொருட்கள் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், இந்த விழாவை சிறப்பாக கொண்டாட, தமிழக அரசு, 1.5 கோடி ரூபாய் அளவிற்கு, நிதி ஒதுக்கீடு செய்யும். ஒவ்வொரு பள்ளிக்கும், மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு தகுந்தார்போல், 1,000 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை, பிரித்து வழங்கப்படும். இந்த நிதி, இந்த ஆண்டு, அரசு பள்ளிகளுக்கு வழங்கவில்லை. விழாவை, சிறப்பாக கொண்டாடுவது குறித்த அறிவிப்பையும், கல்வித் துறை வெளியிடவில்லை. இதனால், அரசு பள்ளிகளில், காமராஜர் பிறந்த நாள் விழா, பெயரளவிற்கு, எவ்வித கோலாகலமும் இல்லாமல் கொண்டாடப்பட்டது.
சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியர் கூறியதாவது: வழக்கமாக, ஒரு மாதத்திற்கு முன்பே, துறையிடம் இருந்து சுற்றறிக்கை வரும். விழாவை நடத்து வதற்கான நிதியும் வரும். இந்த ஆண்டு, எதுவுமே வரவில்லை. எனினும், அதிகாரிகள் உத்தரவுக்கு காத்திருக்காமல், மிக எளிமையாக, காமராஜர் படத்தை வைத்து, மலர்களை தூவி வணங்கினோம். மாணவர்களிடையே போட்டியும் நடத்தவில்லை; பரிசும் வழங்கவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment