எண்ணும் எழுத்துமாகிய கல்வியே, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு, நல்வழி காட்டும் வல்லமை பெற்றது என்ற வகையில், அனைத்து குழந்தைகளும் கல்விச் செல்வம் பெற, எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றன. இச்சூழலில், குழந்தை நேயமிக்க மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிட, நாம் உறுதி ஏற்க வேண்டும்' என, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமான, கடந்த ஜூன் 12ம் தேதி, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், 'முதல்வர் விரும்புவது போல், 'குழந்தை நேயமிக்க தமிழகம்' உருவாக வாய்ப்பு இல்லை' என்கின்றனர் கல்வியாளர்கள். இதற்கு காரணமாக, இலவச கல்வி தரும் பொறுப்பில் இருந்து, அரசு படுவேகமாக பின்வாங்கி வருவதையும், கட்டண கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் பெருகி வருவதையும், சுட்டிக் காட்டுகின்றனர். மேலும், 'தனியார் பள்ளிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, தன் பள்ளிகளுக்கு அரசு தருவதில்லை' என்றும், குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு, இரண்டு உதாரணங்களையும் சொல்கின்றனர்.
தனியாருக்கு கவனிப்பா?திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, மாதுரவேடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பு. கடந்த கல்வி ஆண்டில், இவரது மகன் வெங்கடேசன், திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். வெங்கடேசன், படிப்பில் சற்று பின்தங்கி இருந்த காரணத்தால், பள்ளி நிர்வாகம், தன்னிச்சையாக ஒரு முடிவு எடுத்தது. அதன்படி, பூந்தமல்லியில் இருக்கும் ஒரு, 'டுடோரியல்' மூலம், தனித்தேர்வராக வெங்கடேசன் தேர்வு எழுதும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால், 'ஹால் டிக்கெட்' வாங்கும் தருணத்தில், நடந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வர, காவல் நிலையத்தை அணுகினார் அன்பு. தொடர்ந்து, காவல் நிலையத்தில், சமரச முயற்சிகள் நடந்தன. ஒரு கட்டத்திற்கு மேல், மனம் வெறுத்த அன்பு, நீதிமன்றத்தை நாட, கடந்த மே மாதம் 9ல், நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, அன்புவின் புகாருக்கு, நான்கு வார காலத்திற்குள், தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். ஆனால், தற்போது வரை, அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இப்பிரச்னை காரணமாக, கடைசி ஒரு மாத படிப்பிழந்து, பொதுத்தேர்வில் தோல்வி கண்டு, தற்போது, சிறப்புத்தேர்வு எழுதியிருக்கிறார் வெங்கடேசன்.
அரசு பள்ளிக்கு பூட்டு: இராமநாதபுரம் மாவட்டம், கோடனுார் ஊராட்சி, டி.கிளியூர் தொடக்கப் பள்ளியில், 5ம் வகுப்பு பயின்று வந்த த்ரிஷா, நடப்பு கல்வி ஆண்டில், தேவகோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6ம் வகுப்பு சேர்ந்துவிட, டி.கிளியூர் தொடக்கப் பள்ளி மூடப்பட்டு விட்டது. கடந்த கல்வி ஆண்டில், இப்பள்ளியில், த்ரிஷா மட்டுமே பயின்று வந்திருக்கிறார். அவருக்கு கற்பித்த ஆசிரியை, கிராமத்தில், வீடு வீடாக சென்று, தன் கல்வித்தகுதியை சொல்லி, அரசு பள்ளிக்கு மாணவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டும், வெற்றி கிட்டவில்லை. தற்போது த்ரிஷா படிக்கும் தேவகோட்டை பள்ளி, கிளியூரிலிருந்து, 18 கி.மீ., தொலைவில் உள்ளது. கிளியூரில் இருந்து, 4 கி.மீ., தொலைவில் இருக்கும் திருவாடானையில், ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. ஆனால், அந்த பள்ளிக்கு செல்ல, கிளியூரில் இருந்து காலை 6:30 மற்றும் 9:30 மணிக்கு மட்டும் தான், அரசு பேருந்து வசதி உண்டு. இவற்றில் மட்டுமே, அரசின் இலவச, 'பஸ் பாஸ்' பயன்படுத்த முடியும். மற்ற நேரங்களில், கிளியூருக்கு வந்து செல்லும் தனியார் பேருந்தில், பயணச்சீட்டு கட்டணம், 7 ரூபாய். நாள் ஒன்றுக்கு, 14 ரூபாய் செலவு செய்ய முடியாத காரணத்தால், பெற்றோரை பிரிந்து, விடுதியில் தங்கி படிக்கிறார் த்ரிஷா. அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக, பொருத்தமான நேரத்தில், பேருந்து இயக்குவதற்கு கூட, அரசு தயங்குகிறது.
மூடுவிழா எப்போது?'கிளியூர் தொடக்கப் பள்ளி போல், தமிழகமெங்கும், 200க்கும் மேற்பட்ட பள்ளிகள், மிக மிக சொற்பமான மாணவர்களோடு இயங்குகின்றன' என்ற தகவலோடு, நம்மை அதிர வைக்கிறார் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் கண்ணன். இதுகுறித்து, கூட்டணியின் உறுப்பினர்கள் கூறியதாவது: தொடக்கப் பள்ளிகளின் ஆயுள் நீட்டிக்கப்பட வேண்டுமானால், ஆசிரியர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும். தற்போதைய நிலையில், ஒரு தொடக்கப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், 40 பேர் இருந்தால், அங்கு ஒரு ஆசிரியரும், ஒரு தலைமை ஆசிரியரும்தான் இருக்கின்றனர். எல்லா வகுப்புகளுக்கும், அவர்கள்தான் பாடம் எடுக்க வேண்டும். தற்போது நடத்தப்பட்டு வரும், ஆசிரியர் தேர்வு மற்றும் இடமாற்றத்தின் மூலம், எத்தனை பள்ளிகள் பயனடையப் போகின்றன என்பது, அரசுக்கே வெளிச்சம்.சூழல் இப்படி இருக்க, அரசுப் பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி புகுத்துகின்றனர். ஆனால், ஆங்கில வழி மூலம், கல்வி பயிற்றுவிக்கும் நிலையில் ஆசிரியர்கள் இல்லை. ஆக, இந்த முயற்சி மூலம் மாணவர் சேர்க்கை குறையும்; அரசுப்பள்ளிகள் அழியும்! இந்த பழியை ஏற்கத்தான் ஆசிரியர்களாகிய நாங்கள் இருக்கிறோமே!இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அந்தியூர் அவலம் : ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 33 மலை கிராமங்களில், ஒந்தனை கிராமமும் ஒன்று. இங்கு, 20 மீட்டர் துாரத்திற்குள்ளாக, எதிரெதிரே இரண்டு அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. ஒன்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி; மற்றொன்று, கல்வித்துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப்பள்ளி. இந்த நடுநிலைப்பள்ளியில், தொடக்கக் கல்விக்காக, பழங்குடியினர் குழந்தைகள் சேர முடியாது. 6வது வகுப்புக்கு பிறகுதான், அவர்கள் இப்பள்ளிக்கு வர வேண்டும். இது, இந்த இரு பள்ளிகளுக்கும் இடையே, நடைமுறையில் இருக்கும் எழுதப்படாத சட்டம். ஆனால், இரு பள்ளிகளிலுமே, 'சாதிகள் இல்லையடி பாப்பா' சொல்லிக் கொடுக்கின்றனர். நடுநிலைப் பள்ளியில், 80 மாணவர்களுக்கு 6 ஆசிரியர்களும், உண்டு உறைவிடப் பள்ளியில், 47 மாணவர்களுக்கு, 2 ஆசிரியர்களும் இருக்கின்றனர். உண்டு உறைவிடப் பள்ளியின் விடுதி, பொள்ளாச்சி சம்பவத்தை நினைவுபடுத்தி, பீதிக்குள்ளாக்குகிறது. வன விலங்குகள் எந்நேரமும் வரலாம் என்பதால், இவ்வூரில் பயிர்களுக்கு மின்வேலி அமைத்திருக்கின்றனர். ஆனால், துள்ளி விளையாடும் பள்ளி குழந்தைகளுக்கு, சுற்றுச்சுவர் கூட, அரசு கட்டித் தரவில்லை. இப்பள்ளிகளின் கழிப்பறை சுத்தமோ, நம் மூக்கின் முடிகளை, கருக வைக்கிறது.
ஆசிரியர்கள் எங்கே?இப்படி, கட்டமைப்பு குறைபாடுகள் அதிர்ச்சி தரும் வகையில் இருக்க, இப்பகுதி பள்ளிகளில் நிலவும் ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறை பற்றாக்குறை, பேரதிர்ச்சி தருகிறது.அந்தியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, கொங்காடை அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில், 174 மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களுக்கு பயிற்றுவிக்க இரண்டே ஆசிரியர்கள் மட்டும் தான்! நிர்வாகம் ஒருபுறம், கல்வி மறுபுறம் என, ரெட்டை குதிரை சவாரியில், விழி பிதுங்கி நிற்கும் ஆசிரியர்களைப் பார்த்து, பரிதாபப்படுகின்றனர் உள்ளூர்வாசிகள்.இதேபோல், சத்தியமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்கடம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆசிரியர் பற்றாக்குறை மட்டுமல்லாமல், வகுப்பறை பற்றாக்குறையிலும் சிக்கித் தவிக்கிறது. 450 மாணவர்களுக்கு மேல் பயிலும் இப்பள்ளியில், 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 7 வகுப்பறைகள் மட்டுமே உள்ள இப்பள்ளியில், ஆய்வக வசதி கிடையாது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஆங்கில ஆசிரியரே இல்லாத இப்பள்ளியில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் செயல்படுவது தான் வேடிக்கை!
ஏன் இந்த முரண்பாடு?ஒருபுறம், மாணவர்களின் எண்ணிக்கை குறைவு; மறுபுறம், ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு. ஏற்கனவே, 'அரசுப் பள்ளிகள் தரமற்றவை' என்ற எண்ணம், மக்களிடம் பரவி படர்ந்திருக்கும் நிலையில், இந்த முரண்பாடானசூழல், அரசுப் பள்ளிகளின் ஆயுளுக்கு உகந்தது தானா என்ற கேள்வியை, கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனிடம் முன் வைத்தோம். எடுத்த எடுப்பிலேயே, ''அரசுப் பள்ளிகளை மேம்படுத்த, அரசுக்கு விருப்பமில்லை. அந்த செலவை, 'தண்டச்செலவு' என, அரசு நினைக்கிறது,'' என, சீறினார். அவர் மேலும் கூறியதாவது:தனியார் பள்ளிகள், பெருகி வருவதற்கு, 2002ல், டி.எம்.ஏ. பாய் அறக்கட்டளை வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் மிக முக்கிய காரணம். 11 பேர் கொண்ட அமர்வு, உலகமயமாக்கலை கருத்தில் கொண்டு, கல்வி என்பதை வணிகம் என்று அறிவித்தது. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19-1-G படி, விரும்பிய தொழில் தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது. இதனால், கல்வி எனும் வணிகத்தை, அரசியல்வாதிகள் நிறைய பேர் தொடங்கினர். அப்படி, தனியார் பள்ளிகள் வளரத் தொடங்கிய நாள் முதலே, அரசு பள்ளிகளை ஒழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு விட்டது.கடந்த 1974ல் நடைமுறைக்கு வந்த, தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் இருந்து, பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 1976ம் வருடம், நவம்பர் 29ம் தேதியன்று வெளியிடப்பட்ட அரசாணை மூலமாக, சென்னை மற்றும் மதுரை பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் இருந்து, மெட்ரிக் பள்ளிகள் விடுவிக்கப்பட்டன. அப்போதே, இந்த சட்டத்தின் வளையத்திற்குள் அவை வந்துவிட்டன என்றாலும், தங்களுக்கென்று தனி வாரியம் அமைத்து, விதிகளை வகுத்துக் கொண்டதன் மூலம், இப்போது வரை, இச்சட்டத்தின் பிடியில் இருந்து லாவகமாய் நழுவி வருகின்றன. இறுக்கிப் பிடிக்க வேண்டிய அரசோ, இதமாய் தடவிக் கொடுக்கிறது.'காமராஜர் ஆட்சிக்காலத்தில், 'ஒன்றாய் கற்போம். நன்றாய் கற்போம்' என்பது பொதுப்பள்ளிக்கான குரலாக இருந்தது. அதனால், கல்வியில், தமிழகம் செழித்தது. இன்று, பணம் கொழிக்கும் தனியார் பள்ளிகளின் மீது காட்டும் கரிசனத்தை, அரசுப் பள்ளிகளுக்கான வளர்ச்சியில் காட்டுவதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் தயங்குகின்றனர். இது தான், அரசுப் பள்ளிகள் தரம் இழக்கவும், அழிந்து போகவும் மிக முக்கிய காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரிய அரசியல்: 'ஆசிரியர் சங்கங்களுக்கு இடையிலான அரசியலும் இப்பிரச்னைக்கு ஒரு காரணம்' என, சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர்.இதுபற்றி அவர்கள் கூறுகையில், 'அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கென உள்ள ஒவ்வொரு சங்கத்திற்கும், கல்வித் துறையில் உள்ள வெவ்வேறு அதிகாரிகளின் ஆதரவு உள்ளது. ஒரு சங்கத்தின் துாண்டுதலின்பேரில், வேறு சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஆசிரியர் பந்தாடப்படுவார். இந்த அரசியல் விளையாட்டு, தொடக்கப் பள்ளிகளில் சற்று அதிகமாகவே உண்டு. ஏனென்றால், ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளியாக உள்ள தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டால், அது, உள்ளடி வேலை பார்த்த சங்கத்திற்கு கிடைத்த, மாபெரும் வெற்றியாக கருதப்படும். இந்த அரசியல் காரணமாகவே, ஊர் மக்களுக்கும், அரசுபள்ளிகளுக்கும் தொடர்பில்லாமல் போகிறது. மாணவர் சேர்க்கையும் குறைகிறது' என்றனர்.
புத்துயிர் பெறுமா பள்ளி மேலாண்மை குழு?விடுதலைக்கு பின்பு, 1954 வரை, தமிழகத்தில் இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 21,552 மட்டுமே. ஆனால், காமராஜரின் ஒன்பது ஆண்டுகால ஆட்சிக்கு பின், 1963ல், தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 30,000. 'அரசு பள்ளிகளின் தரம் உயர, பொதுமக்களின் பங்கு மிக அவசியம்' என்ற, அவரது சிந்தனைதான், இதற்கு முக்கிய காரணம். மக்கள் பங்களிப்புடன், 150க்கும் மேற்பட்ட பள்ளி சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார். அதன் மூலம் கிடைத்த நிதியை கொண்டு, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தினார். பொதுப்பள்ளி இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலு, கிராமம், கிராமமாக சென்று அரசு பள்ளிகளின் தரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக, 'கல்வி சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு, ஊழியராகப் பேசாதீர்கள்; உரிமையாளராகப் பேசுங்கள்' என, கல்வி அமைச்சர், இயக்குனருக்கு சுதந்திரம் தந்தார். அரசு பள்ளிகள் தழைத்தோங்கின. இன்று, ஊர் அமைப்புகளுக்கும், அரசுப்பள்ளிக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது. இலவச கட்டாய கல்வி சட்டம் வலியுறுத்தும், பெற்றோர், உள்ளூர் பிரதிநிதிகள் அடங்கிய, 'பள்ளி மேலாண்மை குழு' முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது. 'மாணவர்களை எப்படியாவது பள்ளியில் சேருங்கள்' என, ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் கட்டளை இடுகின்றனரே தவிர, ஊர்மக்களை சந்தித்து, அரசு பள்ளிக்கு ஆதரவு கேட்க மறுக்கின்றனர். ஆசிரியர்கள் குறைவான பள்ளியில் பிள்ளைகளை படிக்க வைக்க, பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். இதனால், அரசு பள்ளிகள் பூட்டப்படுகின்றன. அரசின் ஆதரவோடு, அசுர வேகத்தில், தனியார் பள்ளிகள் வளர்கின்றன.
தீர்வு என்ன?இதற்குத்தீர்வாக, சமூக ஆர்வலர்கள் கூறுவதாவது:இந்த சூழ்நிலை மாறி, அரசு பள்ளிகள் உயிர்பெற வேண்டுமானால், 'அரசு பள்ளியில், மாணவர் சேர்க்கைக்காக, ஆசிரியர்கள் படும் சிரமங்களை, கல்வி அதிகாரிகளும் பங்கிட்டு கொள்ள வேண்டும். அரசு பள்ளிகள் மேம்பட, மக்களின் பங்களிப்பும் வேண்டும்' என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.'தரமான கல்வி, அரசுப் பள்ளிகளில் தான் கிடைக்கும்' என்று, மக்களுக்கு நம்பிக்கை வரும்படி, கல்வித்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதை, தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.இதெல்லாம் நடந்தால் மட்டுமே, அரசு பள்ளிகளில் தொங்கும் பூட்டுகள் விடுதலை பெறும். குழந்தை நேயமிக்க மாநிலமாக தமிழகம் திகழும்.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.
அரசு பள்ளிகளின் ஆயுள்?ஆசிரியர்கள் சொல்வது போல், 'அரசுப் பள்ளிகளை ஒழித்து கட்டும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டனவோ?' என, சிந்திக்க வைக்கும் வகையில், சில பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம், மானுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் ஒன்று. இங்கு, கடந்த கல்வி ஆண்டில், நான்கு மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது மாணவர்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்திருக்கிறது. அதில், இருவர் அண்ணன், தம்பிகள். இம்மூவரும் தற்போது, ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.இந்த மூன்று மாணவர் பள்ளிக்கு, ஒரு தலைமை ஆசிரியர் உட்பட இரு ஆசிரியர்கள் இருக்கின்றனர். 'விரைவில் பள்ளி மூடப்பட்டு, பள்ளி இருந்த இடத்தில் நியாய விலைக்கடை வரப் போகிறது' என்ற வதந்தி, ஊருக்குள் ரெக்கை கட்டி பறக்கிறது. சுவரேறி குதித்து, பள்ளியின் உடைமைகளை, ஊரின் இளசுகள் சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது.
ஆசிரியர்களை செயல்பட விடாமல் தடுக்கும் பணிச்சுமை! தற்போது ஆசிரியர்களின் 'சிறப்பான' பணிகளாவன: அரசு தரும் இலவச சீருடை, குறிப்பேடு, புத்தகம், காலணி, வண்ண பென்சில், பை, பஸ் பாஸ் என அத்தனையையும், தலைமை ஆசிரியர்தான், மாவட்ட தலைமையிடத்தில் இருந்து வாங்கி வர வேண்டும். ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் வாங்கித் தரும் பொறுப்பும் தலைமை ஆசிரியருடையது! இப்பணிகளுக்கு நடுவே, அவர் பாடமும் நடத்த வேண்டும். இவை எல்லாவற்றையும் விட, பள்ளிக்கென்று துப்புரவு பணியாளர்கள் இல்லாத காரணத்தால், அந்த வேலையையும் ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளது. இதனால் தான், பல பள்ளிகளில் ஆசிரியர்கள், இத்தகைய வேலைகளை, மாணவர்களின் தலையில் கட்டி விடுகின்றனர்.
கல்வித்துறையின் ஒரு பானை சோற்றுக்கு...:
*ராஜபாளையம், தென்றல் நகர் தொடக்கப் பள்ளியில், 3 மாணவர்களுக்கு, 2 ஆசிரியர்கள்.
*சிவகங்கை செய்யாலுார் தொடக்கப்பள்ளியில், 1 மாணவருக்கு, 1 ஆசிரியர்.
*திருநெல்வேலி, வெங்கடேஸ்வரபுரம் தொடக்கப் பள்ளியில் 7 மாணவர்களுக்கு, 1 ஆசிரியர்.
*சத்தியமங்கலம், உகினியம் தொடக்கப்பள்ளியில், 23 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள்.
No comments:
Post a Comment