வகுப்பறையில் புத்தகத்தை படித்து பாடம் நடத்தும் முறையை ஆசிரியர்கள் கைவிட்டு, முன்கூட்டியே தயார் செய்து வந்து பாடம் நடத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வலியுறுத்தினார்.
மதுரையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது ஆசிரியர்களுக்கு பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதன் விவரம்: மாணவர்களுக்கு பாடம் நடத்தும்போது ஆசிரியர்கள் அரைத்த மாவையே அரைப்பது, போன்று ஒரே மாதிரி தினமும் பாடம் நடத்தக்கூடாது. சில புதிய எடுத்துக்காட்டுகள், கதைகள் கூறி, ஒவ்வொரு நாளும் அவர்களுக்காக புதிதாக தயார் செய்து பாடம் நடத்த வேண்டும்.
முன்கூட்டியே நடத்த வேண்டிய பாடங்களை ஆசிரியர்கள் தயார் செய்து வகுப்பறையில் புத்தகம் பார்த்து வாசிக்காமல் பாடம் நடத்த வேண்டும். மாணவர்கள் ஏன் படிக்கவில்லை என காரணம் சொல்லாமல், அவர்களை நன்றாக படிக்க வைக்கவும், சுமாராக படிக்கும் மாணவர்களை கண்டறிந்து, சிறப்பு கவனமும் செலுத்த வேண்டும்.
அரசு உயர்நிலை பள்ளிகளில் வாசிக்க மற்றும் எழுத தெரியாத மாணவர்களே இருக்கக்கூடாது. அவ்வாறு மாணவர்கள் இருந்தால் ஒரு மாதத்தில், அவர்கள் திறனுக்கு ஏற்ப ஆசிரியர்கள் கற்பித்தல் பணி மேற்கொண்டு வாசிக்கவும், எழுத வைக்கவும் வேண்டும், என தெரிவித்துள்ளார்.
ஜீன்ஸ், டி சர்ட்டுக்கு தடை: ஆசிரியர்கள் சிலர் ஜீன்ஸ் பேன்ட், டி சர்ட் அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். சமுதாயத்தில் ஆசிரியர்கள் நல்ல நிலையில் மதிக்கப்படுகின்றனர். மாணவர்களின் ரோல் மாடல் அவர்கள். எனவே, ஆடை அணியும் விஷயத்தில் அவர்களுக்கு சுயகட்டுப்பாடு அவசியம். ஜீன்ஸ், டி சர்ட் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும், என கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment