மலைப்பகுதி பள்ளிகளில் சரியான நேரத்தில் வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் நந்தகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆய்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நந்தகோபால் தலைமை தாங்கினார். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பொன்.குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் பயிலும் சிறப்பு மையங்களின் செயல்பாடுகள் குறித்தும், போக்குவரத்து வசதி இல்லா குடியிருப்பு பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பாதுகாவலருடன் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது குறித்தும், விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கடுமையான நடவடிக்கை
மேலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள மற்றும் நிலுவையிலுள்ள பள்ளி கட்டிடப்பணிகள் குறித்தும், பள்ளிகளில் உள்ள கணினி மையங்களில் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து கலெக்டர் நந்தகோபால் கூறுகையில், ‘மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியை, ஆசிரியர்கள் சரிவர வருவதில்லை என்று புகார்கள் வருகின்றன. ஆதலால் இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.
கூட்டத்தில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment