Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 6 August 2014

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செப்., 30 வரை அவகாசம்


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, வரும் செப்., 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 16 விதமான இலவச திட்டங்கள் செயல் படுத்தினாலும் கூட, அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கை பெற்றோருக்கு இல்லாத காரணத்தால், மாணவர் சேர்க்கை அதிகரிக்கவில்லை.

எனவே, அரசு பள்ளிகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டுமென ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோடை விடுமுறைக்குபின், ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. உடனடியாக, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கடந்தாண்டு வரை, ஜூலை 31 வரை மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு பள்ளி கல்வித்துறை அவகாசம் வழங்கியது.
அதன்பின், பணி மாறுதல் மற்றும் குடிபெயர்தல் காரணமாக சில மாணவ, மாணவியர் பள்ளியில் சேர வரும் பட்சத்தில், கல்வி நலன் கருதி, அவர்களை பள்ளியில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

நடப்பு கல்வியாண்டில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாணவர் சேர்க்கைக்கு செப்., 30 வரை கூடுதலாக இரண்டு மாதம் அவகாசத்தை நீட்டித்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள், இதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து, மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இலவச பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சைக்கிள், பஸ் பாஸ் என 16 வகையான கல்வி நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இதற்காக, ஆண்டுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை முழுமையான இலவச கல்வி அளித்தும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைவதும், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரிப்பதோடு, புதிதாக தனியார் பள்ளிகள் உருவாவதும், பள்ளி கல்வித்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது.

அரசு பள்ளிகளில் கிடைக்கும் கல்வி சலுகைகளுக்காக சில பெற்றோர்களே, தனியார் பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்க்கின்றனர். ஏழ்மை காரணமாக, ஒரு தரப்பினர் அவ்வாறு செய்கின்றனர். மற்றபடி, தனியார் பள்ளிகள் மீதுள்ள அபிப்ராயத்தில், பெரிய அளவில் மாற்றம் இருப்பதில்லை.

கடந்தாண்டு வரை, இரண்டு மாதம் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் அளிக்கப்பட்டது; நடப்பாண்டில் இரண்டு மாதம் கூடுதல் அவகாசம் தந்திருப்பது, எதிர்பார்த்த அளவில் அரசு பள்ளிகளில் சேர்க்கை நடக்கவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக, கல்வி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "தனியார் பள்ளிகளில் கல்வி கற்பிக்க கட்டணம் வசூலித்தாலும், படிப்பிலும், ஒழுக்கத்திலும், பள்ளி நிர்வாகத்திலும் சிறப்பான விதிமுறைகளை பின்பற்றுவது பெற்றோருக்கு திருப்தியளிக்கிறது. கல்வி கற்பித்தல், மாணவர்களை ஒழுங்கு படுத்துதல், பள்ளி நிர்வாகம் போன்ற வற்றில் பெரும்பாலான அரசு பள்ளிகள் இன்னும் பின்தங்கி இருப்பதை மறுக்க முடியாது.

பள்ளிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே, அரசு பள்ளி களில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்" என்றார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, "துவக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளியாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், ஆண்டுதோறும் தரம் உயர்த்துவதால், மாணவர் சேர்க்கை குறைந்தது போன்ற மாயை ஏற்படுகிறது. மற்றபடி, வழக்கம் போலவே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது" என்றனர்.

No comments:

Post a Comment