விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தலைமை ஆசிரியையை தன்னிச்சையாக செயல்படவிடாமல், தனி அதிகார மையமாக செயல்பட்ட ஆசிரியரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, குன்னூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு சேதுநாராயணபுரத்தைச் சேர்ந்த ரா.பாலமீனா என்பவர் தலைமை ஆசிரியையாக உள்ளார். இப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக லட்சுமியாபுரம்புதூர் கிராமத்சைச் சேர்ந்த ச.வெற்றிவேல் செழியன் என்பவர் வேலை செய்து வந்தார். வெற்றிவேல் செழியன் தலைமை ஆசிரியையை தன்னிச்சையாக செயல்படவிடாமல் தனி அதிகார மையமாக செயல்பட்டுள்ளார். தலைமை ஆசிரியை எந்த ஒரு செயல் செய்யச் சொன்னாலும் அதற்கு எதிர்மறையாக செய்வதுடன், ஊர்மக்களில் சில நபர்களை பயன்படுத்தி தலைமை ஆசிரியை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வந்துள்ளார். இது குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு புகார்கள் வந்துள்ளது. இதன் அடிப்படையில் அவர், வத்திராயிருப்பு கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செய்யது அலிபாத்திமா மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ.ஜான்சேவியர்ராஜ் ஆகியோரை விசாரணைக்கு அனுப்பியுள்ளார். அவர்கள் ஜூலை 10-ம் தேதி விசாரணை மேற்கொண்டு, 16-ம் தேதி அறிக்கையை அளித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சி.டென்னிஸ் சனிக்கிழமை மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆகஸ்டு 7-ம் தேதி மேல் விசாரணைக்காக பள்ளிக்குச் சென்றேன். அப்போது நடத்திய விசாரணையில் புகாரில் ஆசிரியர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று தெளிவாகியது. மேலும் ஆசிரியர் தலைமை ஆசிரியை மீது மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்யச் சொல்வதாக குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட மாணவர்களிடம் விசாரித்தபோது அது தவறானது என்று தெரியவந்தது. மேலும் மாணவர்களை தலைமை ஆசிரியை வெளி வேலைக்கு அனுப்புவதாக ஆசிரியர் கூறியுள்ளார். அதனை விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்தான் பிள்ளைகளை வெளி வேலைக்கு அனுப்பியது தெரியவந்தது. மேலும் ஆசிரியர் தான் சார்ந்துள்ள சமுதாய ரீதியாக, எங்கள் ஊர், எங்கள் மக்கள், மற்ற ஆசிரியர்கள் சொன்னால் எதுவும் கேட்கக் கூடாது என்று மாணவர்களைத் தூண்டிவிட்டு செயல்பட்டுள்ளதும் தெரியவந்தது.
பள்ளி அமைதலான சூழ்நிலையில், மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயல்கள் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் செயல்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக மேற்படி ஆசிரியர் இம் மாதம் 7-ம் தேதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார் அவர்.
சனிக்கிழமை தற்காலிக பணி நீக்க உத்தரவு ஆசிரியர் வெற்றிவேல் செல்வனிடம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிக்கு வந்த அவர் சற்று நேரத்தில் போய்விட்டார். இது குறித்து தகவல் கிராமத்தில் தெரியவந்ததும் தங்களது பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்துச் சென்று வெளியே வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment