அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்தும் கூட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவீதம் உயர்ந்து வருகிறது.
கடந்த 2008-09 கல்வியாண்டில் 43.6 சதவீதமாக இருந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை, 2012-13 கல்வியாண்டில் 36.5 சதவீதமாக சரிந்துள்ளது. அரசுப் பள்ளிகளை விட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் பல இடங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், அவற்றிலும் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அங்கும் 2008-09-இல் 21.8 ஆக இருந்த மாணவர் சேர்க்கை 2012-13}இல் 17.9 சதவீதமாக சரிந்துள்ளது.
இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 34.5 சதவீதத்தில் இருந்து 45.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கல்விக்காக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவதோடு, மாணவர்களுக்கு இலவசமாக பேருந்து பாஸ், சைக்கிள், புத்தகப் பை, கணிதக் கருவிப் பெட்டி, மடிக்கணினி என அள்ளி வழங்கியும் மாணவர்கள் சேர்க்கை உயரவில்லை. சில அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன.
இதற்கு முக்கியக் காரணம், பட்டிதொட்டிகளில் கூட தொடங்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளும், அரசு பேருந்துகள் நுழையாத கிராமங்களில் கூட சுற்றிவரும் தனியார் பள்ளிகளின் வாகனங்களும்தான். மக்களின் மனநிலை மற்றொரு முக்கியக் காரணம்.
இந்தத் தலைமுறை பெற்றோர் தாங்கள் எவ்வளவு சிரமப்பட்டாலும் பரவாயில்லை, தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என நினைக்கின்றனர். தங்கள் பிள்ளை பிளஸ் 2 படிப்பதற்காக, திருச்செங்கோடுக்கும், நாமக்கல்லுக்கும் 2 ஆண்டுகளுக்கு மட்டும் வீடுமாறிச் செல்கின்ற பெற்றோர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
தனியார் பள்ளிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டத்தால் எந்த மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை உயர்ந்துகொண்டேதான் வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சரிந்துகொண்டே வருகிறது.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்துள்ளபோது, தாங்கள் மட்டும் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் கௌரவக் குறைச்சல் என்ற எண்ணமும் பெற்றோரிடம் வேரூன்றிவிட்டது.
இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் வழக்கம் போல் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள்தான் சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களில் பலர் ஆசிரியர்களின் குழந்தைகள். சாதனை மாணவர்கள் படிப்பது தனியார் பள்ளிகளில். பெற்றோர் பணியாற்றுவது அரசுப் பள்ளிகளில்.
அதாவது, தங்கள் பள்ளிகளில் படித்தால் குழந்தைகள் சாதனைப் படைக்க முடியாது என்பதே அந்தப் பெற்றோர்களின் எண்ணம். தாங்கள் கற்றுக் கொடுக்கும் முறை மீது தங்களுக்கே நம்பிக்கையில்லாமல் அந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அதன் பொருள்.
அப்படியானால், அந்த ஆசிரியரிடம் படிக்கும் குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்? இந்த ஆசிரியர்கள் அரசிடம் வாங்கும் சம்பளத்தை தனியார் பள்ளிகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் நீடித்தால், அரசுப் பள்ளிகளை யாராலும் காப்பாற்ற முடியாது.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டுள்ள சில பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் மாணவர்களைக் சேர்க்குமாறு வீடுவீடாகச் சென்று கேட்கத் தொடங்கியுள்ளனர். இது நிச்சயம் பலனளிக்கும். இதைவிட விரைவாக பலனளிக்கக் கூடிய வழி ஒன்று உள்ளது.
அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகளை கட்டாயம் அரசுப் பள்ளி அல்லது அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என அரசு உத்தரவிட வேண்டும்.
இதற்கு பலமுனைகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பும்தான். ஆனால், தனியார் பள்ளிகளின் மீதான மோகத்தின் வேகத்தை மட்டுப்படுத்த இதைத் தவிர வேறு வழியில்லை.
தற்போது கல்வி மீதான கண்ணோட்டம் மாறியுள்ளது. பள்ளி இறுதி வகுப்புக்குப் பிறகும் தொடர்ந்து கல்லூரியில் சேர்ந்து படிக்கும் கிராமப்புறப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையிலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது வருத்தப்பட வேண்டிய விஷயம். அரசும் கல்வித் துறையும் தீவிரமாகச் செயல்பட்டால்தான் அரசு பள்ளிகள் வாழும்... இல்லையேல் அரசு கல்விக்காக செலவிடும் பலகோடி ரூபாய்களும் விழலுக்கு இறைத்த நீராகத்தான் போகும்!
No comments:
Post a Comment