பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் தமிழப் பாடத்தை கற்பிக்கச் செய்வதுடன், முறையாக கற்பிக்கப்படுகின்றதா என கண்காணிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களை மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் பாலமுருகன் கேட்டுக் கொண்டார்.
மதுரை மண்டலத்திலுள்ள மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் பாலமுருகன் பேசியது:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா உபகரணங்கள், பாடப் புத்தகங்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் கண்டிப்பாக தமிழ் பாடம் கற்பிக்கச் செய்ய வேண்டும். முறையாக தமிழ் பாடம் மாணவ, மாணவியருக்கு கற்பிக்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
வரும் கல்வியாண்டுகளில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க பயிற்சி கொடுக்க வேண்டும். 6,7,8-ம் வகுப்புகளில் இருந்தே இந்தப் பயிற்சியைத் துவக்க வேண்டும், என்றார்.
கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆஞ்சலோ இருதயசாமி (மதுரை), ஜெயக்குமார் (விருதுநகர்), கஸ்தூரிபாய் (திருநெல்வேலி), ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment