அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா?என்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
நடப்பு கல்வியாண்டில்:
தமிழகத்தில், கடந்த, 2011ம் ஆண்டு முதல், ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா, ஐந்து தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு துவங்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக, கடந்த கல்வியாண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், சில அரசு பள்ளிகளில்,ஆறு, ஒன்பது, பிளஸ் 1 (உயிரியல்) வகுப்பு, ஆங்கில வழிக் கல்வியில் துவங்கப்பட்டுள்ளது.இதற்காக, அரசு பள்ளிகளுக்கு, அரசின் சார்பில் கட்டடம், ஆசிரியருக்கு சம்பளம், பிற நலத்திட்டங்கள் போன்றவை கிடைக்கின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் வழிக்கல்வி முறை மட்டுமே அமலில் உள்ளது. 'அரசுபள்ளியில் ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்டு வருவது போல், அரசு உதவி பெறும் பள்ளியிலும், ஆங்கில வழிக் கல்வி துவங்க அனுமதிக்க வேண்டும். ஆங்கில வழிக்கல்வியை போதிக்கும் அரசு பள்ளிகளுக்கு வழங்கும் சலுகைகளை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்' என, அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனால், 'அரசு தரப்பில், அரசு உதவி பெறும்பள்ளிகளுக்கோ அல்லது தனியார் பள்ளிகளுக்கோ, புதியதாக எந்த சலுகையும் வழங்க முடியாது' என, அரசு தெரிவித்துள்ளதாக கூறும் கல்வியாளர்கள்,அதிருப்தியில் உள்ளனர்.14 லட்சம் மாணவர்கள்: இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது:தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 5,071தொடக்கப் பள்ளிகள், 1,608 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அதில், 40,748 ஆசிரியர்கள்; 14 லட்சத்து 23 ஆயிரத்து 615மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மட்டுமல்லாது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன.அரசு பள்ளியை போலவே, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் நலத்திட்டம், ஆசிரியருக்கு சம்பளம் உள்ளிட்டவை வழங்க, கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆங்கில வழிக்கல்வி தேவை என, அவர்கள் விருப்பப்பட்டால், சுயநிதி பள்ளியாக மாற்றிக் கொள்ள வேண்டியது தான்.கடந்த, 1990 - -91ம் ஆண்டுக்கு முன், அரசு உதவி பெறும் பள்ளிகளில் என்ன நடைமுறை இருந்ததோ, அதே நடைமுறை தான் பின்பற்ற வேண்டும் என, அன்றே உத்தரவிடப்பட்டது.தனியார் சார்ந்த கல்வி முறையை, அரசு ஊக்குவிக்க விரும்பவில்லை.
மேலும், அரசு பள்ளிகளே தற்போது தேவையான வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.மாணவர்கள் ஏக்கம்: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின், நாமக்கல் மாவட்ட பொருளாளர் ராமராசு கூறியதாவது:அரசு பள்ளிகளை போலவே, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநிலம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய குழந்தைகள், தங்களுக்கும் ஆங்கில வழிக்கல்வி வகுப்பு கிடைக்குமா என, ஏங்கி உள்ளனர். அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து, அங்கு மாணவர் சேர்க்கை அதிகரித்துவருகிறது.ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ்வழிக் கல்வி முறை மட்டுமே அமலில் உள்ளதால், மாணவர் சேர்க்கை குறைந்துவருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment