Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday 30 April 2014

ஆசிரியர் தேர்வில் 'கிரேடு' முறை ரத்து: ஐகோர்ட்

ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட, 'கிரேடு' முறையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதி தேர்வை நடத்துகிறது. இதில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 60 சதவீதம்பெற வேண்டும். மீதி, 40 சதவீதம், கல்வித் தகுதிக்காக என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி என்றால், பிளஸ் 2 தேர்வுக்கு, 15 மதிப்பெண்; ஆசிரியர் பட்டய படிப்புக்கு, 25 மதிப்பெண் என, 40 மதிப்பெண். பட்டதாரி ஆசிரியர் பணி என்றால், பிளஸ் 2 தேர்வுக்கு, 10; பட்டப் படிப்புக்கு, 15; பி.எட்., படிப்புக்கு, 15, என, 40 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பிரச்னையில்லை. அதற்கான, 'கிரேடு' முறைக்கு தான், தேர்வர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, பிளஸ் 2 தேர்வுக்கு, நிர்ணயிக்கப்பட்ட, 15 மதிப்பெண்ணில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றிருந்தால், 15; மதிப்பெண், 80ல் இருந்து, 90 சதவீதம் வரை பெற்றிருந்தால், 12; மதிப்பெண், 70ல் இருந்து, 80 சதவீதம் வரை, 9; மதிப்பெண், 60ல் இருந்து, 70 சதவீதம் வரை, 6; மதிப்பெண், 50ல் இருந்து, 60 சதவீதம் வரை, மூன்று மதிப்பெண் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தகுதி தேர்விலும், 'கிரேடு' முறை கொண்டு வரப்பட்டது. கடந்த, பிப்ரவரியில், பள்ளி கல்வித் துறை ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், இடஒதுக்கீட்டுப் பிரிவில் வருபவர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில், 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது. அதாவது, இடஒதுக்கீட்டுப் பிரிவில் வருபவர்கள், 55 சதவீத மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி பெறுவர். கிரேடு முறையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்குவதை எதிர்த்தும், தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண் பெறப்பட்டதோ அதன் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' நிர்ணயிக்கக் கோரியும், 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டதை எதிர்த்தும், 2012ல் நடந்த தேர்வுக்கு, மதிப்பெண் தளர்வை விரிவுபடுத்த கோரியும், சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: தேர்ச்சி மதிப்பெண்ணை, 5 சதவீதம் தளர்த்த வேண்டும் என, பல தரப்பிலும் வந்த கோரிக்கையை பரிசீலித்து, மதிப்பெண் தளர்த்துவதில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக, தமிழக அரசு பதிலளித்துள்ளது. எனவே, அரசு பரிசீலிக்கவில்லை எனக் கூற முடியாது. தகுதி தேர்வு, போட்டி தேர்வு அல்ல; அது, தகுதி பெறுவதற்கான தேர்வு. மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள, ஆசிரியர்கள் மீண்டும் தேர்வை எழுதலாம். இடஒதுக்கீடு பிரிவினருக்காக, தேர்ச்சி மதிப்பெண் சதவீதத்தை குறைப்பதற்கு, அரசு, கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் அதிகாரத்தை எதிர்த்து, வழக்கு தொடரப்படவில்லை. எனவே, 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது செல்லும். மதிப்பெண் தளர்த்தியதை, 2012ல் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது. முன் தேதியிட்டு அமல்படுத்தினால், குழப்பம் ஏற்படும். ஏற்கனவே நியமனம் பெற்றவர்கள் பாதிக்கப்படுவர். ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்க, 'கிரேடு' முறையை கையாளுவதில், எந்த அறிவியல் பூர்வ பின்னணியும் இல்லை. இதனால், ஏராளமான முரண்பாடுகள் தான் ஏற்படும்.
கிரேடு முறைப்படி, தகுதி தேர்வில், 60 சதவீத மதிப்பெண் பெறுபவருக்கும், 69 சதவீதம் பெறுபவருக்கும், ஒரே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் என, 42 வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், 69 சதவீதம் எடுத்தவருக்கு, 42 மதிப்பெண், 70 சதவீதம் எடுத்தவருக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண், 48 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, பெரிய முரண்பாடு. எனவே, பிளஸ் 2, பட்டயப் படிப்பு, தகுதி தேர்வில் பெறும், ஒவ்வொரு சதவீத மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண்ணாக, 0.15, 0.25, 0.60 என்ற அடிப்படையில் வழங்க வேண்டும். இதை பின்பற்றினால், முரண்பாடு, பாகுபாடு வராது. இது, அறிவியல் பூர்வமானது. இதை, பரிந்துரையாக தான் அளிக்கிறேன். இதை பின்பற்றலாமா என்பதை அரசு தான் பரிசீலிக்க வேண்டும். அரசு கொண்டு வந்த, 'கிரேடு' முறை, தன்னிச்சையானது, பாரபட்சமானது. அது, ரத்து செய்யப்படுகிறது. நான் கூறியுள்ள முறையையோ அல்லது அறிவியல் பூர்வமான வேறு முறையையோ, அரசு பின்பற்ற வேண்டும். எனவே, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்கள் வழங்குவதற்கு, ஏதாவது ஒரு அறிவியல் பூர்வமான முறையை, விரைவில் கொண்டு வர, அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன்படி, ஆசிரியர்கள் தேர்வு நடக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment