Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 1 December 2013

கிண்டர் கார்டன் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடு

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கிண்டர்கார்டன் வகுப்புகளில் 2014-2015 கல்வியாண்டு முதல் 120 மாணவர்களுக்குமேல் சேர்க்கக்கூடாது என்று தமிழக அரசு தற்போது மெட்ரிக் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை (04.11.2013) அனுப்பியுள்ளது.
தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. புதிய கட்டுப்பாடுகள் குறித்து இத்துறை சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகள் இதோ...

பாலாஜி சம்பத், கல்வி ஆர்வலர்: பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்காக அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறுகிறது. பாதுகாப்புதான் முக்கியக் குறிக்கோள் என்றால், அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்காக, மாணவர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டியதில்லை. தற்போது தனியார் பள்ளிகளில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் பள்ளி என்பதாலோ, சிறப்பாகக் கற்றுத் தரும் பள்ளி என்பதாலோ, இல்லை வேறு ஏதேனும் ஒரு காரணத்துக்காகவோ பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் போதிய இடவசதி, தீத்தடுப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளனவா? போதிய தரத்துடன் செயல்படுகிறதா என்பதை அரசு கண்காணிக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு பள்ளிகளில் இத்தனை மாணவர்களைத்தான் சேர்க்கவேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பது எந்த வகையிலும் சரியாகாது.

என்.ராமசுப்ரமணியன், மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக்குலேஷன் பள்ளி நிறுவனர்: அரசின் இந்த முடிவு சரியல்ல. எங்கள் பள்ளியைப் போன்ற அனைத்து வசதிகளையும் கொண்ட பள்ளியில் படிக்கும் குழந்தைகளை நாங்கள் துரத்திவிட முடியுமா? அந்தக் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் ஆசிரியர்களை என்ன செய்வது? மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்றால், ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் தீ தடுப்பு கருவிகள் இருக்கின்றனவா? பள்ளிப் பேருந்துகள் சரிவரப் பராமரிக்கப்படுகின்றன? என்பன போன்ற ஆய்வுகளை அரசு செய்யட்டும். அதை ஏற்றுக்கொள்கிறோம். அதைவிடுத்து, 120 மாணவர்களைத்தான் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க இடம்கிடைக்காமல் தவிக்கும் நிலைதான் ஏற்படும். இது மறைமுகமாக சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதை ஊக்குவிக்கும். தற்போது கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில்தான் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்றால், பொருளாதார ரீதியாக பள்ளியை நடத்துவது கடினமாகிவிடும். அரசு இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்குமுன்னால் தனியார் பள்ளிகளைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

ஆயிஷா நடராஜன், எழுத்தாளர்: சென்னைப் பல்கலைக்கழகத்துடன், மெட்ரிக்குலேஷன் இருந்தபோது நடைமுறைப்படுத்திய பழைய விதிகளை அரசு மீண்டும் தூசி தட்டி எடுத்திருப்பதாகத் தெரிகிறது. அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்ட விதிகளின்படி தனியார் பள்ளிகளை முறைப்படுத்த, தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும் என்பதில்லை. அப்படிக் குறைக்கும்போது, அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்களை ஈர்க்கலாம் என்று நினைப்பதும் சரியல்ல. ஒரு பள்ளியில் உள்ள வசதிகள் என்னென்ன? கழிப்பறை வசதி உள்ளதா? மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உள்ளதா என்று அரசு பார்க்கட்டும். அருகமைப் பள்ளிகளையும், பொதுப் பள்ளிகளையும் அரசு உருவாக்கட்டும். அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கேற்ப அதிக மாணவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்குரிய வசதிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உள்ளதா என்பதை அரசு உறுதிசெய்து கொள்ளட்டும். RTE சட்ட விதிகளை எல்லாப் பள்ளிகளும் சரிவரப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க, கூடுதல் கண்காணிப்புக் குழுக்களை அமைக்கட்டும். அதைவிடுத்து, செக்ஷன்களைக் குறைப்பதில் அர்த்தமில்லை. 


பெயர் குறிப்பிட விரும்பாத கல்வித் துறை அதிகாரி: தனியார் பள்ளிகள் பலவற்றில் கிண்டர் கார்டன் வகுப்புக்கு 12-க்கும் மேற்பட்ட செக்ஷன்கள் உள்ளன. அங்கு படிக்கும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள போதிய ஆசிரியர்கள் உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆனால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும்போது அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்தால் விபத்தைத் தவிர்க்க முடியாமல் போகலாம். எனவேதான், இந்த புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment