அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6, 10, ப்ளஸ் 2 மாணவ, மாணவியருக்கான ஜாதிச்சான்று, இருப்பிட சான்று உள்ளிட்டவைகளை, பெரும்பாலான பள்ளி ஆசிரியர்கள் பெற்றுத்தராமல், மாணவர்களையே அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, உதவித்தொகை பெறவும், தேர்வு சான்றிதழ்களில் இடம் பெறவும், ஜாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றுகளை, கல்வித்துறைக்கு சமர்பிக்க வேண்டியுள்ளது. கடந்த ஆண்டில், பள்ளியிலேயே இச்சான்றிதழ்கள் பெற்று வழங்க வேண்டும் எனவும், மாணவர்களை அலைக்கழிக்க வேண்டாம், எனவும் தமிழக அரசு உத்தரவிட்டது. கடந்த ஆண்டுகளில், வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு நடையாய் நடந்த ஆசிரியர்கள், நடப்பு கல்வியாண்டில், மீண்டும் மாணவர்கள் தலையிலேயே இப்பொறுப்பை சுமத்தி விட்டனர்.
மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து, பள்ளி சார்பில் பெற்றுத்தரப்பட்ட சான்றிதழ் விவரங்கள் கேட்கப்படுவதால், மாணவர்கள் விரைவாக பெற்று வரும்படியும் விரட்டப்படுகின்றனர். மாணவர்கள் பெற்று வந்த சான்றிதழ்களை, பள்ளி சார்பில் பெற்றுத்தந்ததாக, கல்வித்துறைக்கு புள்ளி விவரங்கள் அனுப்புகின்றனர்.
இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களுக்குரிய சான்றிதழ்கள் பெற்றுத்தரும் பணியில், ஆசிரியர்கள் இறங்கவில்லை. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு லீவு போட்டுவிட்டு, சான்றிதழ்களுக்கு அலையும் நிலை இருந்தது. அரசு உதவி பெறும் பள்ளிகள், சான்றிதழ் பெற்றுத்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், தமிழக அரசின் உத்தரவு நடப்பாண்டிலேயே, பல பள்ளிகள் அலட்சியம் செய்வதால், அடுத்த ஆண்டில் இந்த நடைமுறை சுத்தமாக மறைந்து விடும் நிலை உள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வராமல் அலைந்து வாங்கிக் கொடுத்த சான்றுகளை வைத்து, வெறும் புள்ளி விவரங்களை மட்டுமே பள்ளி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment