சம்பளக் குழு நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் 48 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்து மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு ஊழியர்களுக்காக 7வது ஊதியக்குழுவை அமைப்பதாக மத்திய நிதி அமைச்சர் அறிக்கை வெளியிட்டார். மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படை யில் கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி சம்பள வரையறை குறித்து ஊழியர்கள் தரப்பு, அரசுக்கு இறுதி செய்து அறிக்கை தந்தது.
ஆனால், அரசு சம்பளக் குழுவின் உறுப்பினர் களை நியமிப்பது குறித்தோ, பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப் பது குறித்தோ, இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தோ எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து, கடந்த 10ம் தேதி மகா சம்மேளனத்தின் அகில இந்திய செயற்குழு டெல்லியில் கூடியது. அதில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் 48 மணி நேரம் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்தில் 12 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்கிறார்கள்.
தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். சென்னையில், வருமான வரி அலுவலகம், ஏஜிஎஸ் அலுவலகம், சாஸ்திரிபவன், ராஜாஜிபவன் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட துறைகளில் பணிபுரியும், மத்திய அரசு ஊழியர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த போராட்டத்திற்குப் பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட் டம் நடத்த எங்கள் மகா சம்மேளனம் முடிவெடுக் கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment