அரசு பொது மருத்துவமனையில், மாணவியின் இதயத்தில், இரண்டு மேலறைகளுக்கு இடையே இருந்த, 8 செ.மீ., ஓட்டையை, மார்பைத் திறக்காமல், சிறு துளைகள் வாயிலாக டாக்டர்கள் அடைத்துள்ளனர்.
நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரேம் சிங். நீலகிரி, கூடலூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள், லலிதா தேவி, 14; 9ம் வகுப்பு மாணவி. இதய நோயால் அவதிப்பட்ட அவர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், இதயத்தில் மேல் இரண்டு அறைகளுக்கும் நடுவில், 8 செ.மீ., அளவில், துளை இருப்பது கண்டறியப்பட்டது. மார்பைத் திறக்காமல், இதய நுண்துளை அறுவைச் சிகிச்சை நிபுணர், கணேசன் தலைமையிலான குழு, சிறு துளைகள் வாயிலாக ஓட்டையை அடைத்துள்ளது.
இதுகுறித்து, டீன் கனகசபை, டாக்டர் கணேசன் கூறியதாவது:மலை பிரதேசத்தில், பள்ளிக்கு, தினசரி, 2 கி.மீ., நடந்து செல்ல வேண்டிய மாணவிக்கு, மார்பைத் திறந்து அறுவைச் சிகிச்சை செய்தால், வீடு திரும்ப நாளாகும்; புத்தகை பை சுமந்து செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், சிறு துளை வாயிலாக இதய ஓட்டை அடைக்க முயற்சி மேற்கொண்டோம். இதன்படி, மார்பு பகுதியில் ஐந்து சிறு துளைகள் போட்டு, செயற்கை இழைகளால் ஆன, ஜவ்வால், இதய ஓட்டை அடைக்கப்பட்டது. இரண்டரை மணி நேரத்தில், அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அதிநவீன கருவிகளால் இது சாத்தியமானது. இரண்டு மணி நேரத்தில், பால், தண்ணீர் குடித்தார். நான்கு மணி நேரத்தில், சாதாரண உணவு சாப்பிட்டார். மூன்று நாளில் எல்லா வேலைகளையும் அவரே செய்கிறார். தனியார் மருத்துவமனையில், 1.5 லட்சம் ரூபாய் செலவாகும் இந்த சிகிச்சை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது; ஓரிரு நாளில், அவர் வீடு திரும்புவார். இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment