குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், அவர்கள் மீண்டும் கல்வி பெறவும், பெரியவர்களை காட்டிலும், அதிக ஈடுபாடு கொண்டு, புகார் தருபவர்கள் பள்ளி மாணவர்களே.இதற்கு, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வும், முக்கிய காரணம் என, ஆய்வில் தெரியவந்துள்ளது.
பள்ளி செல்லும் வயதில், குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் சிறார்களை மீட்டு, சிறப்பு கல்வி மையங்கள் வாயிலாக, மீண்டும் கல்வி பெற, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் நலத்துறை, ஆள் கடத்தல் சிறப்புப் பிரிவு போலீசார், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு நல மையம் ஆகியவற்றுடன், குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்டமும் இணைந்து, அவ்வபோது ஓட்டல், உணவகம், பேக்கரி, ஆட்டோமொபைல் கடைகள் என, சிறார்களை அதிகளவில் பணிக்கு அமர்த்தும் கடைகளில் ஆய்வு செய்கிறது.
மேலும், "சைல்டு லைன்' வாயிலாக பொதுமக்கள் கூறும் புகார்களுக்கும், ஆய்வு செய்து சிறார்களை மீட்கும் பணி நடக்கிறது. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் சார்பில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவ்வப்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பள்ளி மாணவர்களே அதிகளவு புகார் தருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும்போது, தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் தரப்படுகின்றன. இதை, குறித்து கொள்ளும் மாணவர்கள், அதிகளவில் புகார் தருவதாக, அதிகாரிகள் தரப்பில்
கூறப்படுகிறது.
மாணவர்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள, இந்த ஆரோக்கியமான வளர்ச்சிக்கு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பத்திரிகைகளும் முக்கிய காரணமாக இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதை மெய்ப்பிக்கும் வகையில், துடியலூர், என்.ஜி.ஜி.ஓ., காலனியில் வசிக்கும் பள்ளி மாணவர்கள், விண்மீன்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி, குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க முன்வந்துள்ளனர். சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, புத்தகங்கள், பேனா என, படிக்க தேவையான பொருட்கள் வழங்கி, முன்னுதாரணமாக இருந்துள்ளனர்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட அதிகாரிகள் கூறுகையில், ""பள்ளி, கல்லூரிகளில் குழந்தை தொழிலாளர் தடுப்பது குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதால், மாணவர்கள் தரப்பில் அதிகளவு புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதிகாரிகளின் ஆய்வு, சைல்டு லைன் மற்றும் பொதுமக்கள் கூறும் புகார்களை தவிர, 30 சதவீத புகார்கள் மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டவையே. தகவல் கொடுப்பது மட்டுமல்லாமல், புகாரின் நிலையை அறிந்து கொள்ளவும் விரும்புகிறார்கள். இது மாணவ சமுதாயத்தின், வளர்ச்சி நிலையை காட்டுகிறது,'' என்றனர்.
No comments:
Post a Comment