திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை நூலகத்தில், சிறுவர்களுக்கென, சிறுவர்களையே உறுப்பினர்களாக கொண்ட "குழந்தைகள் வாசகர் வட்டம்' அமைப்பு துவங்கப்பட்டது.
மாநில அளவில் முதன் முறையாக உடுமலையில் துவங்கப்பட்டுள்ள, வாசகர் வட்டத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. நூலகர் பீர் பாட்ஷா தலைமை வகித்தார். நூலக வாசகர் வட்டத்தலைவர் லெனின் பாரதி பேசியதாவது:
சிறந்ந நூல்களை தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கம், குழந்தைகளிடம் ஏற்பட வேண்டும். பள்ளிகளில் புத்தகங்களை மனப்பாடம் செய்தால் வெற்றி சதவீதம் உயருமே தவிர, வாழ்க்கையில் நிரந்தர வெற்றி பெற முடியாது. குழந்தைகள் சிறந்த நூல்களை படிக்க, படிக்க சிறந்த சிந்தனையாளர்களாக உருவாகிறார்கள். சிறந்த புத்தகங்கள் சமுதாயத்தில் மாற்றம் உண்டாக்கக் கூடிய ஆயுதங்கள்.
குழந்தைகளுக்கு பொதுநல நோக்கை உருவாக்குவது, வாசிக்கும் திறனை மேம்படுத்துவது, நன்னெறிகளை கற்பிப்பது போன்றவையே "குழந்தைகள் வாசகர் வட்ட' அமைப்பின் நோக்கம்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குழந்தைகளுக்கென கருத்தரங்குகள், கதை சொல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் அனைத்து தரப்பு குழந்தைகளும் பயன்பெற முடியும்.இவ்வாறு, லெனின் பாரதி பேசினார்.குழந்தைகள் வாசிப்பு வட்டாரத் தலைவராக மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டார். செயலர், உறுப்பினர்கள் பதவிகளுக்கு பல்வேறு பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment