திருவெண்ணெய்நல்லூரில், நேற்று முன்தினம், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், வாலிபர் ஒருவர், கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, பதற்றம் நிலவுவதால், நேற்று, கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு, விடுமுறை விடப்பட்டது; போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் ஏமப்பூரைச் சேர்ந்த சிலருக்கும், காந்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், நேற்று முன்தினம், மோதல் ஏற்பட்டது. இதில், காந்திக்குப்பத்தைச் சேர்ந்த, உத்தாண்டி மகன் ஏழுமலை, 35, அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, காந்திக் குப்பத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர், கொலை நடந்த இடத்தில், பிணத்துடன் மறியல் செய்தனர். ஏமப்பூரில், கூரை வீடு, சைக்கிள் உள்ளிட்டவைகள், தீ வைத்து எரிக்கப்பட்டன. மூன்று கடைகள், அடித்து நொறுக்கப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த, வருண், வஜ்ரா வாகனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட, அதிரடிப் போலீசார் வரவழைக்கப்பட்டனர். நேற்று காலை, 6:30 மணிக்கு, திருக்கோவிலூர் சப் -- கலெக்டர், சுபோத்குமார், இரு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால், நேற்று, இரண்டாவது நாளாக, கடலூர் - திருக்கோவிலூர் சாலையில், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. திருவெண்ணெய்நல்லூரில், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மோதல் தொடர்பாக, திருவெண்ணெய்நல்லூர், ஏமப்பூர், காந்திக்குப்பம் பகுதியில் உள்ள, கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு, விடுமுறை அளிக்கப்பட்டது. கொலை தொடர்பாக, திருவெண்ணெய்நல்லூர் போலீசார், ஏழு பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
No comments:
Post a Comment