கோவை மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத்தேர்வை 36 ஆயிரத்து 971 பேர் எழுதுகிறார்கள். இது கடந்த ஆண்டை விட 1,417 பேர் குறைவு ஆகும்.
பிளஸ்–2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளும், 5,500 உயர்நிலை பள்ளிகளும், 5,800 மேல்நிலைப்பள்ளிகளும் என 56,300 அரசு பள்ளிகள் உள்ளன. இதேபோல் 10 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் பிளஸ்–2 மாணவ–மாணவிகளின் எண்ணிக்கை 7 லட்சம். எஸ்.எஸ்.எல்.சி. மாணவ–மாணவிகளின் எண்ணிக்கை 8 லட்சம் ஆகும்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 1,959 அரசு பள்ளிகளும், 2,186 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 268 மெட்ரிக் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் 36 ஆயிரத்து 971 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.
கோவையில் 36,971 பேர்
பிளஸ்–2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் 3–ந் தேதி முதல் 25–ந் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். கோவை வருவாய் மாவட்டத்தை பொறுத்தவரை 36 ஆயிரத்து 971 பேர் பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.
இதில் கோவை கல்வி மாவட்டத்தில் 30 ஆயிரத்து 118 பேரும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 6,853 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். கோவையில் 90 மையங்களில் பிளஸ்–2 தேர்வை எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நுழைவுச்சீட்டு வினியோகம்
இந்தநிலையில் தற்போது பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு, பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ‘ஏ’, ‘பி’ என 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 243 மையங்களில் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு வருகிற 22–ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
அதன்பின்னர் மாணவ–மாணவிகளுக்கு பொதுத்தேர்வுக்கான புகைப்படத்துடன் கூடிய நுழைவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது. கடந்த 2012–13–ம் கல்வி ஆண்டில் கோவை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 388 பேர் எழுதினார்கள். இதை நடப்பு கல்வி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1,417 பேர் குறைவாகவே பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.
தனித்தேர்வர்கள்
பிளஸ்–2 பொதுத்தேர்வை எழுத கோவை மாவட்டத்தில் 2,358 தனித்தேர்வர்கள் ஏற்கனவே விண்ணப்பித்து உள்ளனர். தற்போது தட்கல் முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதால், தனித்தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment