திருவொற்றியூர் அரசினர் மகளிர் உயர்நிலை பள்ளிக்கான மின்கட்டணம் செலுத்தப்படாததால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், அந்த பள்ளி, தற்போது இருளில் மூழ்கி, அன்றாட செயல்பாடுகளுக்கே திண்டாடி வருகிறது.
திருவொற்றியூர் சாத்துமா நகர், வரதராஜன் தெருவில் உள்ள அரசினர் மகளிர் உயர்நிலை பள்ளியில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை, 100 மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம், மின்வாரியத்திடம் மின்இணைப்பு பெறப்பட்டது.
ஒன்றும் நடக்கவில்லை
பள்ளியின், மின்கட்டணம் முன்பு திருவொற்றியூர் நகராட்சியே செலுத்தி வந்தது. நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டதால், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலகம் மின்கட்டணத்தை செலுத்தி வந்தது.
இந்த நிலையில், திடீரென மாவட்ட கல்வித் துறைக்கு மின்கட்டண நிதியை, கடந்த ஏழு மாதங்களாக, அரசு குறைத்து ஒதுக்கி வருவதாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாக, சாத்துமா நகரில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளியின் மின்கட்டணம், கடந்த ஆறு மாதங்களாக செலுத்தப்படவில்லை. அதனால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
கடந்த ஆறுமாதங்களாக பள்ளி, இருளில் மூழ்கியுள்ளது. குடிநீருக்கு, மின்மோட்டாரை கூட இயக்க முடியாத அவல நிலை அங்கு நிலவுகிறது.
வெளிப்படையான கோரிக்கை
சமீபத்தில், பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் பேசிய பள்ளி நிர்வாகிகள், மின்கட்டணத்தை யாராவது செலுத்தி உதவும்படி வெளிப்படையாக, கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, திருவொற்றியூர் மின்வாரிய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'மின்கட்டணம் செலுத்துவது குறித்து, பள்ளிக்கு நோட்டீஸ் கொடுத்த பிறகே, மின்இணைப்பை துண்டித்தோம்' என்றார்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது:
ஆண்டுதோறும், பள்ளிகளுக்கான மின்கட்டணத்திற்கு தோராயமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, அனைத்து பள்ளிகளிலும், மின் நுகர்வு அதிகரித்துள்ளது.
ஆனால் ஒதுக்கீடு அதிகரிக்கவில்லை. அதனால், அனைத்து பள்ளிகளுக்கும் மின்கட்டணம் செலுத்த முடியவில்லை. கூடுதல் நிதி கேட்கப்பட்டு உள்ளது. விரைவில் மின்கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment