பேச்சு வார்த்தையில் ஒப்புக் கொண்ட கோரிக்கைகளில் ஒன்றை கூட அமல்படுத்தாததால், சந்தேகம் அடைந்த கீழ்பாக்கம் நர்சிங் மாணவிகள், அரசிடம் எழுத்துபூர்வமாக உறுதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு நர்சிங் பயிற்சி கல்லூரி மாணவிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் தமிழகத்தில் உள்ள 23 நர்சிங் பயிற்சி கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம், சாலை மறியம் உள்பட பல போராட் டம் நடத்தினர். தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து, நர்சிங் பயிற்சி மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.இந்நிலையில் நேற்று காலை கீழ்ப்பாக்கம் அரசு நர்சிங் பயிற்சி கல்லூரி மாணவிகள் 290 பேர் வகுப்புகளை புறக்கணித்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ராமகிருஷ்ணன், டாக்டர் கீதாலட்சுமி, கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ஜோஸ் தங்கய்யா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மாணவிகள், மருத்துவ கல்லூரி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதனை அடுத்து இருதரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது நர்சிங் பயிற்சி மாணவிகள் எழுத்துமூலம் உறுதி தரக்கோரி பேச்சுவார்த்தையில் வலியுறுத் தினர். அதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில், ஈடுபட்ட மாணவிகளின் பிரதிநிதிகள் 8 பேரை அழைத்துக்கொண்டு, டாக்டர் கீதா லட்சுமி தலைமை செயலகத்திற்கு விரைந்தார். சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ் ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது, நர்சிங் மாணவிகளின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். அரசாணை எண் 29 குறித்து சட்ட நிபுணர்களுடன் பேசி தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் முழுவிவரமும் தெரியவரும் என்று அவர் கூறினார். அதன் பிறகு நர்சிங் பயிற்சி கல்லூரி மாணவிகளின் பிரதிநிதிகள் 8 பேரும் பேச்சுவார்த்தை குறித்து, முற்றுகையில் ஈடுபட்ட மாணவிகளிடம் தெரிவித்தனர். அதன் பிறகு முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. மாணவிகள் அனைவரும் பயிற்சிக்கு திரும்பினர்.
No comments:
Post a Comment