செஞ்சி கோட்டையை, வானில் பலூனில் பறந்தவாறு பார்ப்பதற்கான சோதனையை, தனியார் நிறுவனத்தினர் மேற்கொண்டனர். தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனமும் இணைந்து, சுற்றுலா பயணிகளுக்கான ஏர் பலூன்களை இயக்க உள்ளனர். இதற்கு சாத்தியமுள்ள பகுதிகளை தேர்வு செய்து, முதல் கட்டமாக சோதனை முறையில் பலூன்களை பறக்க விடுகின்றனர். பொள்ளாச்சி, செஞ்சி, பெரியகுளம், ஏலகிரி பகுதியில் முதல் கட்டமாக சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, பொள்ளாச்சி பகுதியில் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் செஞ்சியில், சோதனை முறையில் பலூனை பறக்க விட்டனர். வெப்பக் காற்று மூலம் பறக்கும் இந்த பலூன் காற்றின் திசையில் செல்லக் கூடியது. தேவையான திசையில் இயக்க முடியாது. தேவையான இடத்தில் மேலே செல்லவும், கீழே இறக்கவும் வசதிகள் உள்ளன. பயிற்சி பெற்ற பைலட்டுக்கள் இதை இயக்குகின்றனர். பைலட்டுக்கள் கேரிமோர், சையத் கரீமுல்லா ஆகியோர் பலூனை இயக்கினர். மேலும் இரண்டு பேர், இதில் பயணித்தனர். குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவன அதிகாரிகள் பெனடிக் சேவியோ, கிருஷ்டோபர் பிரசாந்த் ஆகியோர் கொண்ட குழுவினர், ஏற்பாடுகளை செய்தனர்.
இது குறித்து பெனடிக் சேவியோ கூறியதாவது: இந்த வகை பலூன்கள் பாதுகாப்பானது. உலகளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்காக இந்த வகை பலூன்களை எல்லா நாடுகளிலும் பயன்படுத்தி வருகின்றனர். முற்றிலும் பருவநிலை மற்றும் காற்றின் தன்மையின் படியே பலூன்களை பறக்க விட முடியும்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செஞ்சிக்கோட்டை போன்ற வரலாற்று நினைவிடங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டு கின்றனர். இந்த வகை பலூனில் பறந்து வானில் இருந்து செஞ்சி கோட்டையை பார்க்கும் போது கட்டுமானம் மிக பிரமிப்பானதாக இருக்கும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.
டிசம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம்வரை மூன்று மாதங்கள் வரை பலூன்களை செஞ்சி பகுதியில் இயக்க முடியும். மூன்று நாட்கள் முகாமிட்டு சோதனை முறையில் பலூனில் பறக்க முடிவு செய்துள்ளோம் . முதல் கட்ட சோதனை திருப்திகரமாக உள்ளது. இவ்வாறு பெனடிக் சேவியோ கூறினார்.
No comments:
Post a Comment