ஒழுக்கமான, கட்டுப்பாடான பள்ளி என்ற பெயர்தான் தங்கள் பள்ளியின் நற்பெயரைக் காப்பாற்றும் என்று, தனியார் பள்ளி நிர்வாகிகள் தீர்மானமாக நம்புகின்றனர். அதனால் இந்தப் பள்ளிகளில் ஆண்-பெண் நட்பு அறவே சாத்தியம் இல்லை. நாமக்கல் குறிஞ்சி பள்ளியின் தாளாளர் தங்கவேலுவுடன் நடத்திய உரையாடல் இதைத் தெளிவாக உணர்த்துகிறது.
''மாணவன் மோகன்ராஜ் எப்படி இறந்தான்?''
''தேனியைச் சேர்ந்த ஒரு பையனுக்கும் இவனுக்கும் சண்டை. பள்ளி நிர்வாகத்துக்குத் தெரிய வந்ததும் இருவரையும் விலக்கிவிட்டு, இரண்டு பேரின் பெற்றோர்களுக்கும் தகவல் கொடுத்து வரச் சொன்னோம். அது எப்படியோ மோகன்ராஜுக்குத் தெரிந்துவிட்டது. பெற்றோருக்குத் தெரிந்தால் அவமானம் என்று நினைத்து, தூக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டான்!''
''வெங்கடேஷ் இறந்தது எப்படி?''
''2013 டிசம்பர் 31-ம் தேதி, வகுப்பில் தேர்வு விடைத் தாளை மாணவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தார் ஒரு பெண் ஆசிரியை. அவருக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி, வெங்கடேஷ் கை கொடுத்துள்ளான். டீச்சர் கை கொடுக்க மறுத்தும் விடாமல் வழி மறித்துள்ளான். டீச்சர் அழுதுகொண்டே சென்றுள்ளார். இந்த விஷயம் தெரிய வந்ததும் வெங்கடேஷின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தோம். ஆனால், இரண்டு நாட்களாக அவர்கள் வரவில்லை. இதற்கு இடையில் பள்ளித் தரப்பில் இருந்து பெற்றோரை வரவழைக்கும் விஷயம் தெரிந்து, அந்தப் பையன் தற்கொலை செய்துகொண்டுவிட்டான்!''
''ஒரு மாணவன் ஆசிரியைக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்வது நாகரிமான செயல்தானே?''
''சார், அவர் ஒரு பெண் ஆசிரியை. மாணவிகளும் மாணவர்களும் பேசிக்கொள்ளக் கூடாது என்பது எங்கள் பள்ளியின் கட்டுப்பாடு. இதுபோன்ற அநாகரிகச் செயல்களை அனுமதிக்க முடியாது!''
''3,000 மாணவர்களுக்கும் அதிகமானோர் உங்கள் பள்ளியில் படிப்பதாகச் சொல்கிறீர்கள். எந்த நம்பிக்கை யில் பிள்ளைகளை அனுப்பிவைப்பது?''
''இந்தப் பிரச்னைகளில் எங்கள் தரப்பில் நியாயம் உள்ளது என்பது மற்ற பெற்றோர்களுக்குத் தெரியும். எனினும் மாணவர்களின் மீது இனிமேல் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வோம்!''
பாரம்பரிய வகுப்பறைச் சூழல் மாற்றப்பட்டு ஆண், பெண் நட்பின் மாற்றங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று உலகளாவிய அளவில் பேசப்படும் நிலையில், நமது பள்ளிகள் காலத்தைப் பின்நோக்கி இழுத்துச் செல்கின்றன. அதை 'ஒழுக்கம்’ என்றும் 'கட்டுக்கோப்பு’ என்றும் பறைசாற்றிக்கொள்கின்றன!
No comments:
Post a Comment