Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday, 9 February 2014

தவறு செய்யும் அரசு அலுவலர்களால் அதிகரிக்கும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் சிலர் செயல்படுவதால் குழந்தை தொழிலாளர்களை தடுக்க முடியவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவ மழை பொய்த்து போனதால் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், விவசாயத்தை நம்பியுள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால், நீண்ட நாட்களாக வயல் வெளியில் வேலை பார்த்த சிறுவர்கள், பள்ளிக்கு செல்வதை விரும்பாமல் நகர்புறங்களில் உள்ள மோட்டார் மெக்கானிக் கடைகள், பைக் மெக்கானிக் கடைகள் மற்றும், நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள், ஹோட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகளில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
இதை தடுத்து, அவர்களை பள்ளிகளில் சேர்க்கும் வகையில் மாவட்ட குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பிரிவின் சார்பில் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குழந்தை தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில மாதங்களாக குழந்தை தொழிலாளர் திட்ட களப்பணியாளர்கள், பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தாலும் பெயர் அளவுக்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, தொழில் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருந்தாலும் அவர்களை மீட்டு பள்ளியில் சேர்க்காமல் கடை உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு குழந்தை தொழிலாளர் குறித்த உண்மை நிலையை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தாமல் மறைத்து விடுகின்றனர்.
சில தினங்களுக்கு முன் கிருஷ்ணகிரி நகரில் திருவண்ணாமலை ரோடு, ராசுவீதி, சேலம் ரோடு, காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். புகாரை தொடர்ந்து தொழிலாளர் ஆய்வாளர் நாராயணன், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், குழந்தை தொழிலாளர் கள அலுவலர் பாலச்சந்திரன், திட்ட பணியாளர் ஸ்ரீரங்கன் ஆகியோர் புகார் வந்த இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது பல கடைகளில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பது தெரியவந்தது.
சோதனைக்குச் சென்ற அதிகாரிகள் கடை உரிமையாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அங்கு குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்ற அறிக்கையை சமர்பித்தனர். லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படும் அதிகாரிகளால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

No comments:

Post a Comment