‘மைனர்’ பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக கூறிய புகாரில் ‘மைனர்’ என்பதற்கு பள்ளி மாற்று சான்றிதழ் தகுதியானது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.
மதுரை மேலுரை சேர்ந்தவர் தினேஷ். மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறி இருந்ததாவது:–
காதல் திருமணம்
நானும் திருநேல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த முப்பிடாதி என்பவரின் மகள் அனிதாவும் காதலித்து வந்தோம். எங்களது காதலுக்கு அனிதாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து அனிதாவை வீட்டில் அடைத்து வைத்திருந்தார்.
அங்கு இருந்து தப்பித்து எங்கள் வீட்டிற்கு அனிதா வந்தார். எங்கள் ஊர் தலைவர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் அனிதாவின் தந்தை முப்பிடாதி எனது மகள் மைனர். அவரை நான் கடத்திச் சென்றாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்து எனது மனைவி அனிதாவை அழைத்து சென்றனர். அனிதா தந்தையுடன் போக மறுத்ததால் பாளையங்கோட்டை காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். எனது மனைவியை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளனர். எனது மனைவி அனிதா மேஜர் என்பதால் அவரது விருப்பத்தின்படி என்னுடன் செல்ல அனுமதித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
பள்ளி மாற்று சான்றிதழ்
இந்த மனு நீதிபதிகள் தமிழ்வாணன், ரவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் அனிதா மேஜர் என சான்றிதழ் அளித்தார். இதில் பெண்ணின் தந்தை தாக்கல் செய்த பள்ளி மாற்று சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டது. பள்ளி மாற்று சான்றிதழ் தான் வயது தீர்மானிக்க தகுதியானது. அனிதா மைனர் பெண் தான். எனவே மனுதாரர் செய்த திருமணத்தை அங்கீகரிக்க முடியாது. உரிய வயதை எட்டிய பிறகு அவர் விரும்பினால் மனுதாரர் கூட செல்லாம். பெற்றோருடன் செல்ல மறுப்பதால் அதுவரை தொடர்ந்து காப்பகத்தில் இருக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை விசாரணையை ஏப்ரல் 16–ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment