Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 6 February 2014

திருச்சியில் தனியார் பள்ளி விடுதியை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவு : மாணவிகளை வெளியேற்ற பெற்றோர்கள் எதிர்ப்பு

திருச்சியில், தனியார் பள்ளி விடுதியை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட்டார். மாணவிகளை வெளியேற்ற பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தனியார் பள்ளி விடுதி

திருச்சி மேலப்புதூர் கான்வெண்ட் சாலையில் அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள விடுதியில் 574 மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். பள்ளி நிர்வாகத்தினால் நடத்தப்படும் இந்த விடுதியில் மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்று பல்வேறு புகார்கள் வந்தன.


இதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் உத்தரவின் பேரில் தாசில்தார்கள் சிவசுப்பிரமணிய பிள்ளை, ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் அந்த விடுதியில் சோதனையிட்டனர். அடிப்படை வசதிகள் தொடர்பான புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தினார்கள். அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் விடுதி காப்பாளரை இடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.


மூடுவதற்கு கலெக்டர் உத்தரவு

இந்நிலையில் தமிழக அரசின் சமூக நல துறை துணை இயக்குனர் தமிழரசி மற்றும் அதிகாரிகள் நேற்று சென்னையில் இருந்து வந்து அந்த விடுதியில் ஆய்வு நடத்தினர். பின்னர் தங்களது ஆய்வு அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பித்தனர். அதில் விடுதியில் உள்ள பல்வேறு குறைகள் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அந்த பள்ளியின் விடுதியை மூடும்படி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் உத்தரவிட்டார்.


மேலும் விடுதியில் உள்ள மாணவிகளை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி திருச்சியில் உள்ள 4 பள்ளிகளின் விடுதிகளில் சேர்க்கவும், அவர்களது படிப்பை மட்டும் இந்த கல்வியாண்டு முடியும் வரை அவர்கள் ஏற்கனவே படித்த பள்ளியிலேயே தொடரும்படியும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

பெற்றோர்கள் எதிர்ப்பு

இந்த உத்தரவின் அடிப்படையில் விடுதியை மூடி மாணவிகளை வெளியேற்றம் செய்வதற்கு துணை இயக்குனர் தமிழரசி, தாசில்தார்கள் சிவசுப்பிரமணிய பிள்ளை, ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று மாலை அந்த பள்ளிக்கு சென்றனர். அப்போது அங்கு ஏற்கனவே வந்து தயார் நிலையில் இருந்த மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இங்கிருந்து வெளியேற்ற விடமாட்டோம்.


அவர்கள் இங்கேயே தங்கி இருந்துதான் படிக்கவேண்டும். மற்ற பள்ளிகளில் இங்கு இருப்பது போன்ற பாதுகாப்பு இருக்காது என கூறினார்கள். இதனை தொடர்ந்து திருச்சி கோட்டாட்சியர் பஷீர் அங்கு வந்து பள்ளி நிர்வாகத்தினர், மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பரபரப்பு

அப்போது பெற்றோர்கள் வேறு விடுதிக்கு மாற்றம் செய்தால் தங்கள் பிள்ளைகளின் படிப்பு வீணாகி விடும். எனவே இந்த கல்வியாண்டு முடியும் வரை அவர்களை இங்கேயே தங்கி இருக்க அனுமதிக்க வேண்டும், விடுதியில் போதுமான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது அதிகாரிகள் உங்கள் பிள்ளைகளின் நலன் கருதி கலெக்டர் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுங்கள் என வேண்டுகோள் வைத்தனர்.


ஆனால் பெற்றோர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கண்டோன்மெண்ட் சரக உதவி போலீஸ் கமிஷனர் கணேசன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. பெற்றோர்கள் காட்டிய பலத்த எதிர்ப்பினால் அதிகாரிகள் பள்ளி விடுதியை நேற்று இரவு மூட முடியவில்லை. பெற்றோர்கள் எழுதி கொடுத்த மனுவை வாங்கி கொண்டு அதிகாரிகள் சென்றனர்.


இன்று வெளியேற்றம்?


6 முதல் 9-ம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் அனைவரும் கலெக்டர் உத்தரவுப்படி வெளியேற்றப்படுவார்கள் என தெரிகிறது. இதற்கான நடவடிக்கைகள் இன்று(வியாழக்கிழமை) எடுக்கப்பட உள்ளது. இதற்கிடையில் அடிப்படை வசதிகள் குறைபாடு தொடர்பாக புகார் தெரிவித்த சில மாணவிகளை தாக்கியதாக பள்ளி நிர்வாகிகள் 4 பேர் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

No comments:

Post a Comment