பொழுதுபோக்கு அம்சங்கள் வீடுதோறும் பெருகிய பிறகு மாணவர்களிடம் சத்தமிட்டு படிக்கும் வழக்கம் குறைந்துவிட்டது. இது ஏன், வீட்டில் படிப்பதே குறைந்துவிட்டது. பெரும்பாலும் டியூசன் தான். டியூசனுக்கு போகும் மாணவர்கள் அங்கேயாவது சத்தமாக படிக்கிறார்களா? இல்லை......நீ மட்டும் படிச்சா போதுமா மத்தப் பசங்க படிக்க வேண்டாமா? என்று அதட்டலுக்குப் பயந்து மாணவன் சத்தமிட்டு படிப்பதே கேவலம் என்ற மனப்போக்கு தற்போது வளர்ந்து வருவது வேதனைக்குறியது.
தற்போது பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடம் தமிழ் செய்தித்தாள் கொடுத்து, அதை சத்தமாக படிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். கண்டிப்பாக ஒரு பத்தி படிக்கும் முன், அவனுக்கு ஏற்படும் குரல் நடுக்கம், சொற்களில் ஏற்ற இறக்கம், வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது போன்ற பல்வேறு தவறுகளை நாம் கவனிக்கலாம். சத்தமாக படிக்கச் சொல்வது எதற்கு தெரியுமா? மொழி அறிவு, பேசும் திறமை, பேச்சு வளம், மொழியை உச்சரிக்கும் தன்மை இவற்றை புரிந்து கொள்ளத்தான்.
மாணவர்கள் படிக்கும் போது வாய்விட்டுப் படியுங்கள், மனதுக்குள் படிக்கும் போது மனப்பாட அறிவு வேண்டுமானால் வளரலாம், வாய்விட்டுப் படிக்கும் போது மட்டுமே மொழிவளம், மொழித்திறமை வெளிப்படும். தமிழ் படிக்கும் போது வார்த்தைகளின் உச்சரிப்பு, அர்த்தம் கண்டிப்பாக மாறுபடும். சத்தமாக நீங்கள் படிக்கும் போது உள்களது மொழி அச்சம், பயம் தானாகவே விலகிவிடும். நீங்கள் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போது உங்களது உச்சரிப்புத் திறமை உங்களுக்கு பதவியை தானாகவே ஈட்டித்தரும். உங்கள் அச்சத்தைப் போக்கும், தன்னம்பிக்கையை வளர்க்கும் வாய்விட்டுப் படிக்கும் பழக்கத்தை இனியாவது ஊக்கப்படுத்தலாமே!
No comments:
Post a Comment