பராமரிப்பு, பழுது நீக்க என்று பல்வேறு காரணங்களை சொல்லி அடிக்கடி நாள் முழுவதும் மின் தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். பொதுத்தேர்வு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளநிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் வாரம் ஒரு முறை நாள் முழுவதும் உள்ள மின்தடை செய்வதால் பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். சில ஆண்டுகளாக தடையில்லா மின்சாரம் என்பதே அரிதாகி விட்டது. அடிக்கடி மின்தடையால் மக்கள் அவதிப்படுவது தொடர்கதையாக உள்ளது. வீடுகளுக்கு மட்டுமின்றி தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து மின்சாரம் விநியோகிக்கப்படாததால் தொழில்கள் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. முதலுக்கே மோசம் என்பதால் தொழிலாளர்கள் பலர் வேலை இல்லாமல் அவதிப்படும் நிலை. மின் பற்றாக்குறையை சரி செய்ய முறையான நடவடிக்கை இல்லை. அதனால் மின்தடை பாதிப்பு குறையவில்லை. சில இடங்களில் மின்தடை பல மணி நேரம் மின்தடை உள்ளது. அதாவது முதலில் 2 மணி நேரம் அப்புறம் ஒரு ஒரு மணி நேரம் விட்டு மீண்டும் 3 மணி நேரம் பிறகு 4 மணி நேரம் கழித்து ஒரு மணிநேரம் என்று இருக்கும், இல்லை என்ற நிலையை எப்போதும் இருக்கிறது. இதற்கிடையில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு காரணங்களைச் சொல்லி காலை 9 முதல் மாலை 5 வரை 8 மணி நேரம் மின் தடை செய்கிறார்கள்.
இதுவே கிராமப்புறம் என்றால் 9 மணி முதல் 10 மணி நேரம் வரை மின்தடை. இப்படி அடிக்கடி நாள் முழுவதும் மின் தடையான ஷட் டவுன் தமிழகம் முழுவதும் பிரபலமான வார்த்தையாகி விட்டது. அதுமட்டுமல்ல Ôநாளைக்கு ஷட் டவுன்னாம்Õ என்ற வார்த்தையை கேட்டாலே பலருக்கு வயிற்றில் புளியை கரைத்து விடுகிறது. காரணம் அந்த வேலை, இந்த வேலை என்று குறிப்பிட்டு சொல்ல முடியாமல் எல்லா வேலையும் மின்தடையால் கெட்டு போவதுதான். வேறு வழியில்லாமல் Ôபராமரிப்பு, பழுது பார்க்கத்தானே, மாதத்திற்கு ஒரே நாள்தானேÕ என்று பலரும் பழகிக் கொண்டு விட்டனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வாரத்திற்கு ஒரு முறை ஷட் டவுன் அமலாகி உள்ளது. அதனால் வாரத்திற்கு ஒரு முறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரம் தொடர்ந்து மின் தடை அமலில் உள்ளது. மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகளுக்காக ஷட்டவுன் என்றவர்கள் வாரத்திற்கு ஒருமுறை பராமரிப்பு செய்யும் அளவுக்கு மின்வாரியத்தின் உபகரணங்கள் அத்தனை தரம் குறைந்ததா என்பது தெரியவில்லை.
ஆனால் பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் வாரந்தோறும் ஷட்டவுன் செய்யவில்லை என்பது தெரியவந்தது. கடந்த சில வாரங்களாக சென்னையில் ஷட்டவுன் நடைப்பெற்ற பகுதிகளுக்கான துணை மின் நிலையங்களிலேயோ, மின் மாற்றிகளிலேயோ எந்த பாராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. அப்படியானால் ஏன் இந்த நாள் முழுவதும் மின் தடை? இது குறித்து அதிகாரிகள் சிலரிடம் கேட்டதற்கு, மின் பற்றாக்குறையை சமாளிக்கதான் இப்படி செய்ய வேண்டி உள்ளது. இப்படி வாரந்தோறும் ஷட்டவுன் செய்வது சென்னையின் எல்லா பகுதிகளிலும் கிடையாது. ஒரு சில பகுதிகளில்தான் இப்படி சில வாரங்களாக ஷட்டவுன். அதுவும் தற்காலிகமானதுதான்Õ என்றனர். ஆனால் இந்த வாரந்தோறும் முழுநாள் மின் தடையான ஷட்டவுன் மற்ற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சென்னைக்கு வெளியில் உள்ள மாவட்டங்களில் 3 மணி நேரமாக உள்ள மின்தடையும் 5 மணி நேரத்திற்கும் மேலாக அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தின் தலைநகரின் நடுப்பகுதிகளான ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, ராயப்பேட்டை பகுதிகளிலேயே இப்படி என்றால் தமிழகத்தின் மூலை முடுக்கில் உள்ள ஊர்களின் நிலைமை பரிதாபம்தான். பொதுத்தேர்வு நெருங்கி வரும் நிலையில் அதிகரிக்கும் மின்தடையால் மாணவர்களும் அவதிப்படவேண்டி உள்ளது. மின்சாரம் இல்லாமல் நோயாளிகளை வைத்திருப்பவர்களும் சிரமப்படுகின்றனர். அதுவும் குளிர்காலம் முடிவுக்கு வரும் காலத்திலேயே இப்படி என்றால் கோடைக்காலம் தொடங்கி விட்டால் தமிழகம் பகலில் வியர்வையில் முழுகியும், இரவு முழுவதும் இருளில்தான் மூழ்கித்தான் கிடக்க வேண்டும் போலிருக்கிறது.
விவசாயிகள் நிலைமை பரிதாபம்
பெருநகரமான சென்னையில் இந்த நிலைமை என்றால் ஊரக பகுதிகள் நிலைமை எப்படி இருக்கும் என்பதை சொல்லாமலே புரிந்துக் கொள்ளலாம். விவசாயத்திற்கு தினமும் 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. அதுவும் எந்த நேரத்தில் வழங்கப்படும் என்று சென்னைக்கு உள்ளதுபோன்று அறிவிப்பெல்லாம் கிடையாது. மின்சாரம் இருக்கிறதா இல்லையா அல்லது மும்முனை மின்சாரமா இல்லை இருமுனை மின்சாரமா என்பதையெல்லாம் காத்திருந்து பயன் படுத்தினால்தான் தெரிந்துக் கொள்ள முடியும். சில நேரங்களில் 2 முனை மின்சாரம் இருந்தாலும் அதை ஆழ்துளை கிணறுகளை நம்பி விவசாயம் செய்யும் தமிழகத்தில் பயன்தருவதாக இல்லை. அதுதவிர 3 மணி நேர மின்தடை விவசாய இணைப்புகளுக்கும் உண்டு. ஏற்கனவே பருவ மழை பொய்த்துப்போய் ஏரி, குளம், குட்டைகள் எல்லாம் வறண்டு போயிருக்கும் நிலையில் தொடரும் மின் தடையால் விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது. இது குறித்து சோளிங்கபுரத்தைச் சேர்ந்த விவசாயி இர.முனுசாமி, Ô விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தருவதாக சொல்கிறார்கள். ஆனால் அதை அரைகுறையாக கூட தருவதில்லைÕ என்று அங்கலாய்த்தார்.
இன்வெர்ட்டரும் பலனில்லை
சில ஆண்டுகளாக அதிகம் விற்பனையான வீட்டு உபயோகப் பொருட்களில் இன்வெர்ட்டர் எனப்படும் மின் சேமிப்பு கலத்திற்குதான் முதலிடம். மின்சாரம் இருக்கும் போது சேமித்து வைத்துக் கொண்டு மின் தடையின் போது வீட்டில் உள்ள விளக்கு, மின்விசிறியை பயன்படுத்த உதவும். பயன்படுத்தும் நேரத்தை விட மின்சாரத்தை இந்த கலத்தின் மூலம் சேமிக்க கூடுதல் நேரம் தேவை. அடிக்கடி மின் தடை ஏற்படும்போது சமாளித்த மக்கள் நாள் முழுவதும் அடிக்கடி மின் தடை செய்வதால் மின்கலத்தில் மின்சாரம் சேமிக்க முடியாமல் தவிக்கின்றனர். அதனால் இன்வெர்ட்டர் பல ஆயிரம் கொடுத்து வாங்கியும் பயன்படுத்த முடியாத நிலைமை உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த விசாலாட்சி, Ôஎங்க அம்மா படுத்த படுக்கையாக இருக்கும் பக்காவாத நோயாளி. அவர் உடலில் புண் ஏதும் ஏற்படாமல் இருக்க மோட்டார் மூலம் இயங்கும் காற்று படுக்கையை பயன்படுத்துகிறோம். நாள் முழுக்க மின்சாரம் இல்லாத நாட்களில் மோட்டார் பயன்படுத்த முடிவதில்லை. மேலும் மின்விசிறி இல்லாததால் அவருக்கு அதிகமாக வியர்க்கிறது. அதனால் படுக்கை புண் வந்து விடுமோ என்று பயமாக உள்ளது. இன்வெர்ட்டர் வைத்திருந்தும் தொடர்ந்து மின்சாரம் இல்லாததால் பயன்படுத்த முடியவில்லை. தண்ணீர் பாக்கெட்களை வாங்கி வந்து கட்டிலில் பரப்பில் அதன் மீது துணி போட்டு படுக்க வைத்துள்ளோம். கூடவே அடிக்கடி கை விசிறியால் விசிறிக் கொண்டிருக்கறோம் என்றார்.
படிக்க இடமாற்றம்
இன்னும் சில நாட்களில் மார்ச் மாதம் 3ம் தேதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அடுத்து மார்ச் இறுதியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும். இப்படி அடிக்கடி முழுநாள் மின்தடை செய்வதால் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராக முடியாமல் சிரமப்படுகின்றனர். பகலில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பகலில் மின் விசிறி இல்லாமல் படிக்க முடிவதில்லை. வசதியான வீட்டுப் பிள்ளைகள் என்றில்லை ஏழை மக்கள் கூட சென்னையில் மின்விசிறி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதனை பயன்படுத்த மின்சாரம்தான் இல்¬ல். அதுமட்டுமல்ல இரவு நேரங்களில் திடீரென ஏற்படும் மின் தடையால் படும் அவதிகள் தனி. மயிலாப்பூரைச் சேர்ந்த ராஜலட்சுமி, Ôஎன் மகள் +2 படிக்கிறாள். தேர்வுக்காக ஒரு வாரம் விடுமுறை விட்டிருக்கிறார்கள். ஆனால் திடீரென நாள் முழுவும் மின்தடை ஏற்படுவதால் படிக்க சிரமப்படுகிறார்கள். அதனால் மயிலாப்பூரில் மின் தடை என்றால் ஆதம்பாக்கத்தில் உள்ள அம்மா வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவேன். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த 2 இடங்களிலும் ஷட்டவுன் என்பதால் வியாசர்பாடியில் உள்ள அவங்க ஆயா வீட்டுக்கு போய் விட்டோம். நல்ல மார்க் எடுத்தால் தானே நல்ல எதிர்காலம் இருக்கும். அதனால் இந்த மின் தடையுடன் போட்டி போட்டு அலைய வேண்டி உள்ளது என்றார்.
No comments:
Post a Comment