சமூக நலத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டம் செயல்படுத்த படுகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 65,000 சத்துணவு மையங்கள் உள்ளன. தற்போது 40 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
எனினும், சத்துணவு மையங்களில் பல ஆண்டுகளாக ஊழியர் பற்றாக்குறை இருந்து வருகிறது. பல்வேறு மையங்களில் அமைப்பாளர்கள் இல்லாததால், ஒரே அமைப்பாளர் ஒன்றிக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களை கவனித்து வருகிறார். தற்போது பணிபுரிந்து வரும் உதவியாளர்களுக்கு, சமையலாளராக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று சத்துணவு ஊழியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால், அரசு இதை ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து, இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் கடந்த 2012ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இதனால், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதில் இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில், சத்துணவு துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடப் பிரச்னையை சரிசெய்ய, மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிபவர்களை, சத்துணவு மையங்களில் பணியமர்த்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக தவகல்கள் வெளியாகியுள்ளது. புதிதாக ஆட்களை நியமித்தால், அவர்களுக்கு போனஸ், ஓய்வூதியம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்க வேண்டியிருக்கும்.
இதனால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருபவர்களை, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப சத்துணவு மையங்களில் பணியமர்த்தினால், பஞ்சாயத்து சார்பில் ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் இருந்து, ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதலாக வழங்கினால் மட்டும் போதும் என்று அதிகாரிகள் நினைக்கின்றனர். இதனால், அவர்களை எளிதாக சத்துணவு மையங்களில் உள்ள பணிகளை செய்ய வைக்கலாம் என்று அரசு நம்புகிறது. ஆனால், தமிழக அரசின் இந்த முயற்சிக்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பழனிச்சாமி கூறியதாவது: கடந்த ஆட்சியில் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதும், சுமார் 15 ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள், 13 ஆயிரம் உதவியாளர்கள் என மொத்தம் 28 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில், சத்துணவு துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிட பிரச்னையை சரிசெய்ய, 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள ஊழியர்களை சத்துணவு மையங்களில் பணியமர்த்த போவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், பதவி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்படுவதோடு, எங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளும் மறுக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, 100 நாள் வேலை திட்ட ஊழியர்களை சத்துணவுத்துறையில் பணியமர்த்தும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய புதிதாக ஆட்களை நியமிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment