தமிழகத்தில் 7 அரசு பி.எட் கல்லூரிகளும் 14 அரசு உதவிபெறும் பி.எட் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. மொத்த 2400 பி.எட். இடங்களும் 450 எம்.எட் இடங்களும் உள்ளன.
இது தவிர 600–க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் ஒற்றைசாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் பெறப்பட்டு பின்னர் சென்னையில் கலந்தாய்வு நடத்தப்படும்.
பட்டப் படிப்புக்களில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும் அதன் பிறகு கலந்தாய்வில் அவர்கள் பங்கேற்பார்கள்.
நீண்ட நாட்கள் இதற்கான செயல்முறைகள் வகுக்கப்பட்டு கவுன்சிலிங் நடத்தப்படும்.
இது கால நேரத்தை வீணாக்குவதோடு கல்லூரி ஊழியர்களின் வேலைப்பளுவையும் அதிகரித்து வந்தது.
சென்னையில் லேடி வெலிங்டன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் சாமியானா பந்தல் போடப்பட்டு இருக்கைகள், பல்வேறு வசதிகள் செய்து தருவதில் பணச் செலவும் அதிகரித்தது. இதனால் இந்த வருடம் பி.எட்.மாணவர் சேர்க்கையை எளிமைப்படுத்தும் விதமாக தேவையற்ற அலைச்சல், கால நேரத்தை வீணாக்காமல் இருக்க ஆன் லைன் மூலமாக நடத்த தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகம்தான் அனைத்து பி.எட் மற்றும் எம்.எட் கல்லூரிகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்து செயல்படுத்தி வருகிறது.
மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் தேர்வு முறைகள் போன்றவற்றை ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தயாரித்து செயல்படுத்தி வருகிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக ஜி.விஸ்வநாதன் பொறுப்பேற்று பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
பி.எட். மாணவர் சேர்க்கை குறித்து துணை வேந்தர் ஜி.விஸ்வநாதன் கூறியதாவது:–
இந்த வருடம் பி.எட் மற்றும் எம்.எட் மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளோம். மாணவ – மாணவிகளை சென்னைக்கு அழைக்காமல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் மூலமாக ஆன் – லைன் வழியாக கலந்தாய்வு நடத்தலாமா என்று ஆலோசித்து வருகிறோம்.
இதுபற்றி விரைவில் முடிவு செய்து அறிவிப்போம். மாணவர் சேர்க்கைக்கான தேதியும் அறிவிக்கப்படும் விண்ணப்பங்கள் நேரிலோ, கல்லூரிகளிலோ வாங்கத் தேவையில்லை.
ஆன்– லைன் மூலமாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இந்தத் திட்டம் சிறப்பாக அமையும் பட்சத்தில் இனிவரும் காலங்களில் ஆன்– லைன் கலந்தாய்வு மூலம் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
இதன் மூலம் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி அலைவது மிச்சமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment