தமிழகத்தில் வசித்து வரும் கிறிஸ்துவர், முஸ்லீம், சீக்கியர் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர் கல்வி படிப்பிற்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து ஆட்சியர்(பொறுப்பு) முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவர், முஸ்லீம், பார்சி, ஜெயின் மதத்தினர் மற்றும் புத்த மதத்தினரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அரசு அல்லது உதவி பெறும் கல்வி நிலையங்களில் பிளஸ்1, பிளஸ்2, ஐ.டி.ஐ, ஐ.டி.சி, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், எம்.பில், ஆராய்ச்சி படிப்புகள் ஆகியவைகள் படிப்பதற்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கான விண்ணப்பங்களை(<www.momaschoarship.gov.in>) என்ற ஆன்லைன் முகவரியில் வருகிற செப்.15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதேபோல், ஏற்கனவே உதவித் தொகை பெறுவோர் வருகிற அக்.10ம் தேதி வரையில் புதுப்பிப்பதற்கு கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை பெற மாணவ, மாணவிகள் கடந்த அரசு பொதுத்தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
அதோடு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவ, மாணவியர் விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து கையொப்பம் இட வேண்டும். பின் மதிப்பெண் சான்றிதழ், ஜாதி, வருவாய் சான்றிதழ் நகல் மற்றும் கல்விக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, இருப்பிட முகவரி, தனி நபர் வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களை இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் செப்.25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். அதையடுத்து, அக்.10ம் தேதிக்குள் புதுப்பித்தலுக்கு சமர்பிக்க வேண்டும்.
இதற்கான கல்வி உதவித் தொகை அந்தந்த மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட உள்ளதால், வங்கிக் கணக்கு எண் மற்றும் குறியீடு எண்ணையும் தவறாமல் சமர்பிக்கும் போது குறிப்பிட வேண்டும். கல்வி நிலையங்களில் ஆன் லைனில் மாணவ, மாணவிகளால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்க வேண்டும். உடனே அந்த விண்ணப்பங்களை ஆன்லைனில் பரிந்துரை செய்ய வேண்டும். மேலும், விண்ணப்ப படிவங்களில் கையொப்பம் இடப்பட்டு, அனைத்து சான்றுகளுடன் அக்.5ம் தேதிக்குள் புதிய பதிவிற்கும், அக்.31-ம் தேதிக்குள் புதுப்பித்தலுக்கும் ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரிடம் தவறாமல் சமர்பிக்க வேண்டும்.
எனவே சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையும்மாறு ஆட்சியர்(பொறுப்பு) முனுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment