கோவை மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டு நான்கு நாட்களான நிலையில், ஆங்கில வழி பிரிவு முதல் வகுப்பில் 2439 மாணவர்கள் உட்பட மொத்தம் 8,191 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை மேம்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவங்கப்பட்டது. மேலும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப கல்வி, நலத்திட்ட பொருட்கள் வினியோகம், கணினி வழிக்கல்வி, செயல்பாட்டு கல்வி, திறன் மேம்பாட்டு தேர்வு, ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இருப்பினும், தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பெரிதளவில் அதிகரிக்கவில்லை என்பதே உண்மை. நடப்பு கல்வியாண்டில், ஆங்கில வழிக்கல்வி 95 சதவீத தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் துவங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கைக்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு பள்ளிகளில் விளம்பர பலகை வைத்தும், ஆசிரியர்கள் நேரடியாக குடியிருப்பு பகுதிகளில் பிரசாரம் செய்தும் மாணவர்களை சேர்த்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வி புதிதாக 92 பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ளது. தற்போது, மொத்தம் 341 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி செயல்பட்டு வருகிறது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி கூறுகையில், ''அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, நல்ல முறையில் நடந்து வருகிறது. நேற்று மாலை வரை, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் முதல் வகுப்பில், தமிழ் வழி பிரிவில் 5752 பேர், ஆங்கில வழி பிரிவில் 2439 பேர் உட்பட, முதல் வகுப்பில் மொத்தம் 8,191 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மொத்தம் 15 ஆயிரத்து 612 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.
No comments:
Post a Comment