திருச்சி: கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில், பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. பள்ளிக்கு சீருடையுடன் வரும் அரசு பள்ளி மாணவர்களை, இலவசமாக அழைத்து வருமாறு, அரசு பஸ் கண்டக்டர்களுக்கு, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
முழு ஆண்டுத்தேர்வுகள் முடிந்ததை அடுத்து, ஏப்ரல் 23ம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டது. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 90 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது குறித்து, போக்குவரத்து கழகங்களுக்கு அரசு தரப்பில் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, பள்ளிகளில் சேர்க்கையின் போது வழங்கிய முகவரியை கொண்டு, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களில் செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இந்த ஆண்டு, பள்ளி மாணவர்களுக்கு புதிதாக பாஸ் வழங்கும் வரை, கடந்தாண்டு பயன்படுத்திய இலவச பஸ் பாஸ் வைத்திருந்தாலோ, அல்லது அரசு பள்ளி சீருடையுடன் வந்தாலோ, பஸ்களில் ஏற்றிச் செல்ல வேண்டும், என்று கண்டக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம், என்றனர்.
No comments:
Post a Comment