பள்ளி வாகனங்களில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு பள்ளி வாகன ஆய்வுக் குழுவினர் மூலம் வாகனங்களை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது:–
தமிழக முதல்வரின் ஆணையை நடைமுறைப்படுத்திடும் பொருட்டு, பள்ளி வாகனங்கள் விபத்து ஏற்படாவண்ணம், பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு ஏதுவாக, பள்ளி வாகனத்தின் உட்புறம், வெளிபுறம் மற்றும் வாகன அமைப்புகளை ஆய்வு செய்தும், பொதுச்சாலையில் வாகனம் இயங்க தகுதி உடையதா? என்பதனை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம் மற்றும் வேடசந்தூர் ஆகிய ஊர்களில் மாவட்ட அளவில் வருவாய்த்துறை, கல்வித்துறை, போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அடங்கிய பள்ளி வாகன ஆய்வுக் குழுவினர் மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட 448 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 423 வாகனங்கள் பொது சாலையில் இயக்க தகுதி வாய்ந்தவையாக கண்டறியப்பட்டன. மீதமுள்ள 25 வாகனங்களில் காணப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி நிர்வாகத்தினர் பள்ளி மாணவ–மாணவியர்களை வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லக் கூடாது. வாகன ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தகுதி உடையவர்களா? என்பதை தொடர்ச்சியாக கண்காணித்து வரவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment