தொடக்க கல்வி பள்ளிகளுக்கான கலந்தாய்வு மாறுதலில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தொடக்க கல்வி துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கான கலந்தாய்வு மாறுதல் ஜூன் 18 முதல் நடைபெற்று வருகிறது. அரசாணையில் ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அரசாணைக்கு புறம்பாக கலந்தாய்வு மாறுதல் நடைபெறுகிறது. ஜூன் 24ம் தேதி ஒன்றியத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் என ஆணையில் உள்ளது.
இதற்கு மாறாக, வெளிமாவட்டத்தில் இருந்து பணி நிரவல் உள்ள ஒன்றிய பள்ளிகளில் மாறுதல் ஆணை பெற்று, 19ம் தேதியே சில ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டத்தில் அதிக அளவில் முறையற்ற மாறுதல் நடைபெறுகிறது. ஜூன் 30 மற்றும் ஜூலை 1ம் தேதிகளில், இணையதளத்தின் மூலமாக மாவட்ட மாறுதல் நடைபெறும் என்பது வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. அதிகாரிகளிடம் கேட்டால், மேலிடத்து உத்தரவு என அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே, இந்த முறையற்ற மாறுதலை தடுக்க பள்ளிக் கல்வி துறை செயலர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment