அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு பி.எட்., ஆசிரியர்களை நியமிக்கக் கோரும் மனுவைப் பரிசீலிக்குமாறு பள்ளிக் கல்வித் துறைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
அனைத்து மாவட்ட சிறப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் வடிவேல்முருகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.
மனு விவரம்: மனவளர்ச்சி குறைவு, காது கேளாமை, பார்வைத் திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளைக் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களால்தான் பாடம் நடத்த முடியும். ஆனால், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பணியிடம் ஏதுமில்லை.
நடப்பு ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையில் 94 ஆயிரம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் படிக்கின்றனர். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர்.
பள்ளிகளில் தற்போது மற்ற மாணவர்களுக்கு எந்த முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறதோ, அதே முறையில்தான் கற்றல்திறன் குறைபாடு உடையவர்களுக்கும் கற்பிக்கப்படுகிறது. அவர்களுக்கென தனிக் கவனம் செலுத்தி பாடம் நடத்தவில்லை. இதனால் அவர்கள் போதிய கல்வி பெற முடியாத நிலை உள்ளது.
மேலும், அரசு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறுவதற்காக இம் மாணவர்களை குறிப்பிட்ட வகுப்புகளில் சேர்க்காமல் புறக்கணிக்கும் நிலையும் உள்ளது.
எனவே, பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க சிறப்பு பி.எட். ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு அனுப்பிய கோரிக்கை மனு மீது நடவடிக்கை இல்லை. அரசுப் பள்ளிகளில் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்ளை நியமிக்குமாறு புது தில்லி உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, பல்வேறு மாநில அரசுகளும் பள்ளிகளில் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து வருகின்றன.
எனவே, தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு பி.எட். ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு பள்ளிக் கல்வித் துறைச் செயலர், இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment