அமிர்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 6 மாதங்களாக முள்புதர்கள் மற்றும் கழிவுநீருக்கு மத்தியில் செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பள்ளி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட 20-வது வார்டில் அமைந்துள்ளது அமிர்தபுரம் டாக்டர் அம்பேத்கர் நகர். இப்பகுதியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை 25 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளிக்கு கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் நுழைவாயில் உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பள்ளி முன்பு இருக்கும் நிலத்தின் உரிமையாளர் அங்கு வீடு கட்டினார். இதனால் கிழக்கு பகுதியில் இருந்த பள்ளியின் நுழைவு வாயிலுக்கு பூட்டுப் போடப்பட்டது.
இதனால் வடக்கு பகுதியில் மட்டும் மாணவர்கள் சென்று வந்தனர். இந்நிலையில் தற்போது பள்ளியை சுற்றிலும் முள்புதர்கள் வளர்ந்து அடர்ந்த காடுபோல் காட்சியளிக்கிறது. மேலும் பள்ளியை சுற்றிலும் அதிகளவில் குப்பைகள் கொட்டப்படுவதால் அங்கு பன்றிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. சில நேரங்களில் பன்றிகள், பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள முள்புதர்களில் சுற்றித்திரிகிறது.
மேலும் அப்பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளி அருகே அதிகளவில் தேங்குகிறது. இதனால் அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதுதவிர, பள்ளிக் கட்டடத்தைச் சுற்றிலும் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாணவர்களின் சுகாதாரத்தில் அக்கறைக் கொண்டு, தொடக்கப்பள்ளி முன்பு வளர்ந்திருக்கும் முள்புதர்களை அகற்றி, பள்ளிக்கு மேற்கு பக்கம் வழியாக நுழைவு வாயிலை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பள்ளி அருகே தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment