Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 6 August 2014

இன்ஜினியரிங் படிப்பு ஆர்வம் குறைந்தது - பொறியியல் கல்லூரிகளில் 1.2 லட்சம் இடங்கள் காலி


இன்ஜினியரிங் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் சீட்டுகள் காலியாக உள்ளன. இந்நிலையில் துணை கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில், இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சத்து 11 ஆயிரத்து 589 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு 1 லட்சத்து 73,687 பேர் விண்ணப்பித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 7ம் தேதி பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சலிங் துவங்கியது. நாள்தோறும் சராசரியாக 4 ஆயிரத்து 400 மாணவ, மாணவிகள் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். ஜூலை 7ம் தேதி தொடங்கி கடந்த 4ம் தேதி வரை 28 நாள்கள் நடைபெற்ற கவுன்சலிங்கில், 1 லட்சத்து 64 ஆயிரத்து 929 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். இதில், அனைத்து பிரிவுகளும் சேர்த்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 79 மாணவ, மாணவிகள் இடங்களை தேர்வு செய்தனர். 59 ஆயிரத்து 300 மாணவர்கள் கவுன்சலிங்கில் பங்கேற்கவில்லை. 496 மாணவர்கள் இடம் வேண்டாம் என கூறி சென்றுள்ளனர்.
இந்தாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையை பொறுத்தளவில், பல்வேறு பாடப்பிரிவுகளில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரத்து 510 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இதனால், பல இன்ஜினியரிங் கல்லூரிகள் நிதி சுமையின் காரணமாக இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இன்ஜினியரிங் அட்மிஷனில் 80 ஆயிரம் சீட்கள் நிரம்பவில்லை. இந்த வருடம் இது மேலும் 20 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் போதிய ஆர்வம் காட்டாததே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று கவுன்சலிங் நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான மாணவர்கள் நேற்று அண்ணா பல்கலைக் கழகத்தில் நேரில் பதிவு செய்தனர். பொதுப் பிரிவில் கலந்துகொள்ள தவறிய மாணவர்களும், இந்த துணை கவுன்சலிங்கில் கலந்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment