இப்போது வருமோ, எப்போது வருமோ என்று பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அரசு பணிக்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியல். இந்த தேர்வுப் பட்டியல், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியிடப்படும் இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு உள்ளதையும் மறுக்க முடியாது.
வேறு எந்த தகுதியையும் கருத்தில் கொள்ளாமல், வேறுமனே மதிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொள்வது நியாயமானதா என்ற குமுறல்கள், பட்டதாரிகள் மத்தியில் பரவலாக உள்ளது.
இதுகுறித்து கல்விமலர் இணையதளத்திற்கு தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட, சில பெயர் குறிப்பிட விரும்பாத, அரசுப் பணியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சில பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க, TET என்ற தகுதித்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே எங்களுக்கு போதாத காலம் தொடங்கியது.
ஒ
ரு தரமான ஆசிரியரை மதிப்பிட, TET என்ற தேர்வு மட்டுமே சரியான ஒன்றா என்ற கேள்வி இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், அந்தப் பிரச்சினை கிடக்கட்டும். அந்த தேர்வையெழுதி, தேர்ச்சியும் பெற்றாகிவிட்டது.
ஆனால், தேவைக்கும் அதிகமான ஆசிரியப் பட்டதாரிகள் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், தகுதியானவர்களை தேர்வுசெய்ய, அரசு தரப்பில் கடைபிடிக்கும் நடைமுறைகள்தான் கொடுமையாக இருக்கின்றன.
வெறுமனே மதிப்பெண் அடிப்படை என்பது எப்படி சரியாக இருக்கும். 12ம் வகுப்புத் தேர்வில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1000 மதிப்பெண்கள் பெறுவதற்கும், இன்று அந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இன்றைய நிலையில், 1100 மதிப்பெண்களை மிகவும் சாதாரணமாக பெறுகின்றனர் மாணவர்கள். அதற்கேற்ப நடைமுறைகள் மாறிவிட்டன.
அதேபோல், பி.ஏ., ஆங்கில இலக்கியம் போன்ற பட்டப் படிப்புகளில், 10 ஆண்டுகளுக்கு முன்னால், 50% மதிப்பெண்கள் எடுப்பதே சிறப்பானதாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்றோ, 70% மதிப்பெண்களே சாதாரணம். நடைமுறைகள் அவ்வாறு மாறிவிட்டன. எனவே, மதிப்பெண்களை மட்டுமே வைத்து அளவிடுவது எந்த வகையில் நியாயம்?
மேலும், சமூகநீதி சலுகைகளான, கலப்புத் திருமணம் புரிந்தோர், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான முன்னுரிமை சலுகைகளுக்கு மதிப்பில்லையா? வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து பல்லாண்டு காலம் காத்திருப்பவர்களுக்கு நீதி கிடைக்காதா?
நாங்கள் TET தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், அத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, அரசுப் பணிக்குத் தேர்வு செய்யும்போது பின்பற்றப்படும் நடைமுறைகள்தான் சிக்கலானவைகளாக உள்ளன.
எந்தவித நடைமுறை அறிவும், அனுபவமும் இல்லாத புதிதாக படிப்பை முடித்த ஆசிரியப் பட்டதாரிகள், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலான கட்-ஆப் என்ற நடைமுறையின் மூலம், தகுதியான ஆசிரியர்கள் என்ற பெயரில், பல மூத்த, அனுபவமிக்க, முன்னுரிமை தகுதிகளைப் பெற்று, TET தேர்விலும் தேர்ச்சிபெற்ற பட்டதாரிகளை புறந்தள்ளி, பணி வாய்ப்புகளைப் பெறுவது எந்த வகையில் நியாயம்?
வெறுமனே, பாடப்புத்தக அறிவு மட்டுமே தகுதியான ஆசிரியர்களை உருவாக்கி விடுமா? எனவே, தயவுசெய்து, கட்-ஆப் அடிப்படையில் மட்டுமே பணி வாய்ப்பு என்ற நடைமுறையை கைவிட்டு, TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, பதிவு மூப்பு, முன்னுரிமை சலுகைகள், பணி அனுபவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே, பணி நியமனம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கையை அரசு தயவுகூர்ந்து பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
No comments:
Post a Comment