வங்கிக் கணக்கு குறித்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ்.,க்கு அக்., 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும்' என வங்கிகள் அறிவித்துள்ளன.
வங்கிகள் இந்த அறிவிப்பை, வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவித்து உள்ளன. இதுநாள் வரை இலவச சேவையாக இந்த வசதி இருந்தது. தற்போது, கூடுதல் சேவை என்ற அடிப்படையில், ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு, 50 காசு வசூலிக்கப்படும். நடப்பு கணக்கு வைத்திருப்போரிடம், மூன்று மாதங்களுக்கு, 20 ரூபாய் வசூலிக்கப்படும் என, தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன.
பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு விதமான கட்டணத்தை நிர்ணயித்துள்ளன. எஸ்.எம்.எஸ்., என்ற அடிப்படையில் கணக்கிடாமல், எஸ்.எம்.எஸ்., சேவைக்கு, ஆண்டுக்கு, 100 ரூபாய் வசூலிக்கப்படும் என, கனரா வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன.
எஸ்.எம்.எஸ்., சேவை கட்டாயம் இல்லை. கூடுதல் சேவையாக இச் சேவையைப் பெற விரும்புவோர், பெற்றுக் கொள்ளலாம் என, வங்கி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, கனரா வங்கி அதிகாரியும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொது செயலருமான சீனிவாசன் கூறியதாவது: வங்கிக் கணக்குகள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்டு விட்டன. வாடிக்கையாளர் ஒருவர், வங்கிக்கு வராமலேயே, தன் கணக்கை, நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இயக்கலாம். இதனால், அவரது கணக்கு குறித்த விவரங்களை, உடனுக்குடன் அவருக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம், வங்கிக்கு ஏற்படுகிறது. கணக்கில் பணம் செலுத்துதல், எடுத்தல் ஆகியவை குறித்து வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும், எஸ்.எம்.எஸ்., சேவை கூடுதல் சேவையாக உள்ளது. எஸ்.எம்.எஸ்., அனுப்ப, பொதுத்துறை அல்லது தனியார் தொலைத் தொடர்பு சேவையை அணுக வேண்டும். இதற்கு வங்கி, கட்டணம் செலுத்துகிறது. இதன்மூலம், வங்கிக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது
என்பதற்காக, மிகக் குறைந்த கட்டணத்தில், எஸ்.எம்.எஸ்., சேவையை அளிக்கிறோம்.
இதன் மூலம், வாடிக்கையாளருக்கு கூடுதல் வசதி கிடைக்கிறது. இச்சேவை தேவையில்லை என நினைக்கும் வாடிக்கையாளர்கள் ரத்து செய்து கொள்ளலாம்.
தொலைத் தொடர்பு சந்தையில், சாதாரணமாக ஒரு எஸ்.எம்.எஸ்., அனுப்ப என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அதைவிட மிகக் குறைந்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது.
இச்சேவை மூலம், மூன்றாம் நபர் வங்கிக் கணக்கை இயக்குவது தடுக்கப்படும். மீறி இயக்கினால் அவர்களை பிடிக்கவும் எஸ்.எம்.எஸ்., சேவை பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment