அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசு அடிப்படையில் பள்ளிகளில் நடந்த வாட்ச்மேன், துப்புரவு பணியாளர் நியமனத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில், விசாரணை அதிகாரியான தொழில்துறை முதன்மைச் செயலாளர் சங்கர் ஆஜராக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் கணேசன் தாக்கல் செய்த மனு:உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு, தகுதியானவர்களின் பெயர்களை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் 2012 ஜூன் 6 ல் பரிந்துரைத்தது. வாட்ச்மேன் பணிக்காக 2012 ஜூன் 14 ல் மேலூர் கல்வி மாவட்ட அலுவலக நேர்காணலில் பங்கேற்றேன். நான் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி. எனக்கு தகுதி இருந்தும், பணி நியமனம் வழங்கவில்லை.உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு 28 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சர், மதுரை வடக்குத் தொகுதி, மதுரை தெற்கு, உசிலம்பட்டி, திருமங்கலம் எம்.எல்.ஏ.,க்கள், மதுரை மாவட்டச் செயலாளர், தொட்டியம் மாவட்டச் செயலாளர் சிபாரிசுப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் (16 பேர்) என தனித்தனியே பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது. பணி நியமனத்தை ரத்து செய்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.
விசாரணை அதிகாரியான தொழில்துறை முதன்மைச் செயலாளர் சி.வி.சங்கர், 'பணி நியமனம் முறையாக நடந்துள்ளது. தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகளின் சிபாரிசு அடிப்படையில் நியமனம் நடந்துள்ளதாக கூற முடியாது,' என அறிக்கை தாக்கல் செய்தார். இதில் தனிநீதிபதி அதிருதிப்தியை வெளியிட்டார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.பாலமுருகன் ஆஜரானார். அரசு வக்கீல் கால அவகாசம் கோரினார்.நீதிபதி: வழக்கு விசாரணைக்குத் தேவையான ஆவணங்கள் உள்ள நிலையில், கால அவகாசம் எதற்கு? அவசரம் கருதி, விசாரணை இன்று(செப்., 23) ஒத்திவைக்கப்படுகிறது. விசாரணை அதிகாரி சங்கர், ஐகோர்ட்டில் ஏற்கனவே பெற்ற அசல் ஆவணங்களுடன், இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment