பரிதாபம்! : தொடக்க, நடுநிலை கல்வியில் பின் தங்கிய... : ஏமாற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தேவை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், ஆசிரியர்களின் போதிய பங்களிப்பு இல்லாததால், தொடக்க கல்வி, 30வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்கள் அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். தமிழக அரசு, தர்மபுரி மாவட்ட மாணவர்களின் நலன் கருதி, 786 தொடக்க பள்ளிகள் மற்றும், 311 நடுநிலைப்பள்ளிகளை துவங்கி, நடத்தி வருகிறது. ஆனால், மாவட்டத்தில் உள்ள, ஒரு சில பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள், முழு ஈடுபாடுடன் பணியாற்றமால் உள்ளனர்.
மேலும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்ற, பல ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக, கிராமங்கள் மற்றும் மழைக்கிராமங்களில் பணியாற்றி வந்த பல ஆசிரியர்கள், தங்களது செல்வாக்கு மூலம், தாங்கள் விரும்பும் மாவட்டங்களுக்கு, இடமாற்றம் பெற்று வருவது தொடர்கதையாக உள்ளது.
இதனால், தர்மபுரி மாவட்டத்தில், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் தொடர்ந்து வருகிறது. மேலும், தர்மபுரி மாவட்டத்திற்கு இடமாறுதலில் வரும் ஆசிரியர்களும், இங்கிருந்து, விரைவில் இடமாற்றம் பெற்றுச் செல்லும் அவலநிலை உள்ளது. இதனால், தர்மபுரி மாவட்டம் தொடக்க கல்வியில், சில ஆண்டுகளாக, தொடர்ந்து பின்தங்கி வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த ஆய்வில், தர்மபுரி மாவட்டம் தொடக்க கல்வியில், 30வது இடத்தை பிடித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் , சில ஆண்டுகளில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 தேர்வில், தேர்ச்சி விகிதத்தில், தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், தொடக்க கல்வியில் பின் தங்கி உள்ளது, கல்வி ஆர்வலர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும், பல ஆசிரியர்கள், தாங்கள், பணியாற்றும் பள்ளிக்கு செல்லாத நிலை உள்ளது. மேலும், தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றும் பல தொடக்ககல்வி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பங்குதாரர்களாக உள்ளனர். இதனால், அவர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளிக்கு செல்லாமல், அப்பகுதியில் உள்ள பட்டதாரிகளுக்கு, 5,000ம் வரை கொடுத்து, மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் அவல நிலை உள்ளது. பல்வேறு நிர்பந்தம் காரணமாக, இதற்கு, அப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களும், துணைபோகும் அவலநிலை உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், முறையாக பள்ளிக்கு செல்லாத, 200 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வித்துறையினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், முறைகேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட மற்றும் மாநில கல்வித்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி கல்வி தரத்தை மேம்படுத்த, தமிழக அரசு, முறைகேட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீதும், அவர்களுக்கு துணை செல்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment