Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 30 January 2014

அறிவு சார்ந்த சமுதாயத்தை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்: கவர்னர் பேச்சு

''அறிவு சார்ந்த சமுதாயத்தை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்,'' என, தமிழக கவர்னர், ரோசய்யா, பள்ளி விழாவில் பேசினார்.

கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியின், 150ம் ஆண்டு விழா, நேற்று நடந்தது. விழாவிற்கு, பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர், ஜி.ஆர்.மூப்பனார் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளியின், 150ம் ஆண்டு, நினைவு வளைவு கல்வெட்டை, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், வாசன் திறந்து வைத்தார். விழா மலரை, தமிழக கவர்னர், ரோசய்யா வெளியிட்டு பேசியதாவது: தமிழகத்தில் உள்ள, 150ம் ஆண்டு விழாவை, கடந்த, சில பள்ளிகளில், இதுவும் ஒன்று. 21ம் நூற்றாண்டில், அறிவு சார்ந்த சமுதாயத்தை, ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். நம் நாட்டின் முன்னேற்றம், தற்போதுள்ள, தலைமுறையிடம், நாம் எதிர்பார்க்க வேண்டியிருப்பதால், அதற்கேற்ற வகையில், மாணவர்களிடம், அன்பு, நேர்மை, அறிவு ஆகியவற்றை, ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு, நாம் கண்டுபிடிக்கும் திறனில் தான் உள்ளது. எனவே, மாணவர்கள், கடின உழைப்புடன், தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

'போதை' தலைமை ஆசிரியர் விவகாரம்: பள்ளியில் அதிகாரிகள் விசாரணை

வகுப்பறையில், தலைமை ஆசிரியர் மது அருந்துகிறார் என, மாணவர்கள் கூறிய புகாரையடுத்து, அசகளத்தூர் பள்ளியில், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், விசாரணை நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அடுத்த, அசகளத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில், 28ம் தேதி நடந்த, ஊரக விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற, அழகுவேலு பாபு எம்.எல்.ஏ., விடம், தலைமை ஆசிரியர் மகாலிங்கம், வகுப்பறையில், மது அருந்துவதாக, அப்பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, எம்.எல்.ஏ., ஆட்சியர் சம்பத் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மார்ஸ் ஆகியோரிடம், தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரினார். இது குறித்த செய்தி, நேற்று, 'தினமலர்' நாளிதழில் வெளியாகியது. இதையடுத்து, மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி, தனமணி தலைமையில், துறை அதிகாரிகள், நேற்று, அசகளத்தூர் பள்ளியில், விசாரணை நடத்தினார். அங்கு, தலைமை ஆசிரியர் மீதான புகார்கள் குறித்து, ஆசிரியர்கள், மாணவர்களிடம், விசாரணை நடத்தினர்; அதன் அறிக்கையை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்பியுள்ளனர்.

இன்று தியாகிகள் தினம்


இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராது பாடுபட்டு, இன்னுயிரை ஈந்த, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மறைந்த நாள் ( ஜன.30) தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம். நாடு சுதந்திரம் பெற்றதில், மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. 1948 ஜன.30ம் தேதி, காந்தியடிகள், சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவின் துக்க நாளாக இது அமைந்தது. அவரது தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தும் வகையில், இன்று இந்தியா முழுவதும் காலை 11 மணிக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. உலகம் முழுவதிலும் பெரிய தலைவர்கள் கொல்லப்பட்ட வரலாறு உண்டு. இந்த தியாகிகள் நாளில் நாட்டுக்கு உழைத்த, அவர்களின் கருத்துக்களையும், கொள்கைகளையும் நினைவுகூர்ந்து, தியாகிகளின் கனவுகள் நனவாகிட அனைவரும் உழைத்திடுவோம்.

சான்றிதழ்களின் உண்மை தன்மையை சரிபார்க்க 14 சிறப்பு குழுக்கள்: தேர்வு துறை ஏற்பாடு

அரசு பணியில் உள்ளவர்களின் கல்விச் சான்றிதழை சரிபார்த்து, உடனுக்குடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதற்காக, 14 சிறப்பு குழுக்களை அமைத்து, தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசு பணிகளில், ஒருவர் சேர்ந்ததும், அவரின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட துறைகள், 'சான்றிதழ்கள் உண்மையானது தான்' என, அத்தாட்சி கொடுத்த பின் தான், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர், பணி நிரந்தரம் செய்யப்படுவார். அந்த வகையில், அரசு பணியில் சேரும் அனைத்து வகை ஊழியர்களின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, ஆசிரியர் கல்வி டிப்ளமோ ஆகிய சான்றிதழ்கள், தேர்வுத் துறைக்கு அனுப்பப்படும். இவற்றை சரிபார்த்து, உடனுக்குடன், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவதில், தேக்கநிலை இருந்து வருகிறது. இதனால், பல ஆயிரக்கணக்கான ஊழியர், ஆசிரியர், பணி நிரந்தரம் செய்யப்படுவது, தள்ளிப் போகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க, 14 சிறப்பு குழுக்களை, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், நியமித்து உள்ளார். பிளஸ் 2 தனித் தேர்வுப் பணிகளை, தேர்வுத் துறை இயக்குனரக ஊழியர்கள் பார்த்து வந்தனர். பல பணிகள், கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்வதால், பணி பளு, சற்று குறைந்துள்ளது. இதனால், பிளஸ் 2 பணியை, சென்னை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்திடம் ஒப்படைத்துவிட்டு, இயக்குனரக ஊழியர்களைக் கொண்டு, சிறப்பு குழுக்களை, இயக்குனர் அமைத்துள்ளார். ஒவ்வொரு பிரிவிலும், மூன்று பேர் இருப்பர். தேங்கியுள்ள சான்றிதழ்கள், உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு, ஓரிரு மாதங்களில், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, அனுப்பி வைக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

'இன்டர்னல்' மதிப்பெண் மாற்றம்: தேர்ச்சி சதவீதம் குறைந்தது

அண்ணா பல்கலைக் கழகம், அகத்தேர்வு (இன்டர்னல்) மதிப்பெண்கள் வழங்குவதில், மாற்றம் கொண்டு வந்ததையடுத்து, இந்த ஆண்டு, மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

தமிழகத்தில், 550 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில், செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின், தேர்வுகளில், 20 மதிப்பெண்கள், அகத்தேர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண்களை, அந்தந்த கல்லூரிகளே, மாணவர்களுக்கு வழங்கி வந்தன. இந்த ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகம், அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்குவதில், மாற்றத்தைக் கொண்டு வந்தது. தற்போது, அகமதிப்பீடு மதிப்பெண்களை, மூன்று அகமதிப்பீடு தேர்வுகள் மற்றும் வருகைப் பதிவேடு ஆகியவற்றிக்கு, கணக்கிட்டு வழங்கியுள்ளது. அதாவது, ஒரு தேர்வுக்கு, 5 மதிப்பெண்கள் வீதம், 3 தேர்வுகளுக்கு, 15 மதிப்பெண்களும்; வருகைப் பதிவேட்டிற்கு, 5 மதிப்பெண்களும் சேர்த்து, 20 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. முன்னர், 45 சதவீதம், வருகைப் பதிவு இருந்தாலே, முழு மதிப்பெண் வழங்கப்பட்டது. தற்போது, 75 சதவீதத்திற்கும் கீழ், வருகை தந்த மாணவர்களுக்கு, பூஜ்ஜியம் மதிப்பெண்ணும், 76 - 80 சதவீதம் வருகைக்கு, 1 மதிப்பெண்ணும், 81 - 85 சதவீதத்திற்கு, 2 மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன. இந்த புதிய நடைமுறையில், அகத்தேர்வில், குறைந்த மதிப்பெண்களையே, மாணவர்களால் பெற முடிகிறது. இதன் விளைவாக, அண்மையில், வெளியான தேர்வு முடிவில், முதலாமாண்டு மாணவர்களைத் தவிர, மற்ற மாணவர்களின், தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்; அரசு ஒதுக்கியது ரூ. 80 லட்சம்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, மாவட்டத்திற்கு தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 80 லட்சம் ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, தலா 100 பள்ளிகள் (உயர்நிலை மேல்நிலை) ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும், தலா 50 மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கு, பசுமை தினம் கொண்டாடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, புகையிலை இல்லாத பள்ளி வளாகத்தை உருவாக்குதல், மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி போட்டிகள் நடத்தி, ஒருங்கிணைப்பாளர்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகின்றனர். இதற்கான செலவுகளுக்கு தலா ஒரு பள்ளிக்கு 2,500 ரூபாய் என, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 32 மாவட்டத்திற்கு 80 லட்சம் ரூபாய் காசோலையை , பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ளார்.

Wednesday, 29 January 2014

தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க 01.06.1988க்கு முன்னர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தை கணக்கிடுவது சார்பான அரசாணைகளின் தொகுப்பு

நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 30.01.2014 அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 வரை அரசு அலுவலகங்கள் / நிறுவனங்களில் மௌனமும் அதைத்தொடர்ந்து தீண்டாமை உறுதிமொழியும் எடுக்க அரசு உத்தரவு


பணி நிரந்தரம் செய்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
ஆசிரியர்கள் கவலையின்றி இருந்தால் தான் மாணவர்களை இந்த நாட்டின் எதிர்காலத் தூண்களாக உருவாக்க முடியும். ஆனால், தமிழக அரசின் தெளிவற்ற கொள்கைகளால் அனைத்துத் தகுதிகளையும் கொண்ட ஆசிரியர்கள் தினக்கூலி தொழிலாளர்களைவிட குறைந்த ஊதியம் பெற்று வாடிவருகின்றனர்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல் ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
05.03.2012 அன்று தமிழக அரசு பிறப்பித்த அறிவிக்கையின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் நேர்காணல் மூலம் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றாலும், அனைத்து பணி நாட்களிலும் முழு நேரமும் இவர்கள் பணியாற்றுகின்றனர்.
ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் மற்ற பாடங்களை நடத்தும்படியும் பணிக்கப்படுகின்றனர்.
முழு நேர ஆசிரியர்களுக்குரிய அனைத்துப் பணிகளையும் செய்யும் போதிலும், இவர்களுக்கு மாதம் ரூ. 5,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இது தினக்கூலி தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊதியத்தைவிட மிகவும் குறைவாகும்.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே இவர்களுக்கு பணி வழங்கப்படுவதால் மே மாதத்திற்கு ஊதியம் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்குரிய எந்த சலுகையும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
மேலும் பகுதி நேர சிறப்பாசிரியர்களில் பலர் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியமர்த்தப்பட்டிருப்பதால் அவர்கள் பெறும் ஊதியம் அவர்களின் உணவுக்கும், தங்குமிடத்திற்கும் கூட போதுமானதாக இல்லை.
தங்களை நிரந்தர ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை சிறப்பாசிரியர்கள் மேற்கொண்டுவரும் போதிலும், அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. மாறாக முழுநேர சிறப்பாசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை கடந்த 08.05.2013 அன்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இதன்படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நிலைப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளுடன் 5200 – 20,200 + தர ஊதியம் 2800 என்ற விகிதத்தில் காலமுறை ஊதியம் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுதி நேர சிறப்பாசிரியர்களும், இப்போது தேர்ந்தெடுக்கப்படும் முழு நேர சிறப்பாசிரியர்களும் ஒரே கல்வித் தகுதி கொண்டவர்கள், ஒரே மாதிரியான முறையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பணி செய்பவர்கள்.
ஆனால், ஒரு பிரிவினருக்கு மாதம் 5000 ரூபாயும், இன்னொரு பிரிவினருக்கு மாதம் சுமார் 20,000 ரூபாயும் வழங்குவது சரியா? சமநீதியா? என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.
பகுதி நேர சிறப்பாசிரியர்களின் குடும்ப நலனையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும். இவர்களில் தகுதியுடையவர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு, போட்டித் தேர்வு நடத்தி பட்டதாரி ஆசிரியர்களாகவோ அல்லது முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவோ நியமிக்க வேண்டும்.
இதற்கான அறிவிப்பை நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை பிப்ரவரி 5க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளதை அடுத்து அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை பிப்ரவரி 5–ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. இதையடுத்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாவட்டஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா தொடக்கப்பள்ளிகளில் வாரத்துக்கு 5 நாள் வேலை: வருடத்துக்கு 200 பள்ளி வேலைநாட்கள்

Kendriya Vidyalayas set to switch to 5-day week for primary classes


All Kendriya Vidyalayas (KVs) across the country are likely to switch to a five-day week for primary classes (up to Class 5) from the new academic session.
The proposal for a five-day week to “give space for students to pursue self-learning as per their aptitude and interest” is set to be taken up by the Board of Governors of the Kendriya Vidyalaya Sangathan on Tuesday. Officials said the board was likely to clear the move. However, a proposal to cut the working hours of KV teachers was unlikely to be passed, said sources.
HRD Minister Pallam Raju chairs the board, while Minister of State Jitin Prasada is a member.  The proposal to switch to a five-day schedule is in keeping with the Right to Education Act. The proposal was first mooted by the KVs in 2012, but was rejected.
“There should be no objection to a five-day week for primary students as the KVs will still be able to meet the 200 school days requirement mandated under the Right to Education (RTE) Act. The schools will also be able to meet the stipulated minimum teaching hours requirement under the Act. So there is little argument to subject the younger children to an extra day at school,” said an official.
The KVs have increased working hours for teachers from 6 hours 10 minutes to 7 hours 30 minutes, as stipulated under the RTE Act. Teachers have opposed the decision.

தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா?

முகம் தெரியாத மனிதர்களின் பாராட்டுகள் வந்து குவிந்தாலும், என் கல்வி சார்ந்த சுற்றத்தில் என் எழுத்துகள் அதிகம் படிக்கப்படவில்லை என்ற குறை எனக்கு உண்டு.
“தமிழ் படிச்சு என்ன ஆகப் போகிறது? வேலை கூட கிடைக்காது” என்று பலர் என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். ஆங்கில வழிக் கல்விதான் வேலைக்கு உத்தரவாதம், ஆங்கில அறிவுதான் மெத்த அறிவு, உள்ளூர் மொழி வாழ்க்கைக்கு உதவாது என்கிற எண்ணங்கள் வலுப்பெற்று வருகின்றன. கடன் வாங்கி பெரிய பள்ளியில் சேர்க்கும் எளியவர்கள் குழந்தை ஆங்கிலம் பேச ஆரம்பித்தவுடன் கொடுத்த காசுக்கு பலன் கிட்டியதாக மகிழ்கிறார்கள். ஆங்கிலம் தெரியாவிட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது என்று தீர்மானமாக நம்புகிறார்கள்.
இது உண்மையா?
ஆங்கிலம் இன்று உலகின் பிரதான வியாபார மொழி. அதன் அறிவும் தேர்ச்சியும் உங்களை தொழில் உலகில் பிழைக்க பயன்படும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால், ஆங்கிலம் தெரிந்தால்தான் எந்த வேலையும் செய்யமுடியும் என்பது பொய். மொழி அறிவு எல்லா வேலைகளுக்கும் சமமாக தேவைப்படுவதில்லை. மென்பொருள் எழுதுவதற்கும், வாகனம் தயாரிப்பிற்கும், ஓட்டுனருக்கும் தேவைப்படும் மொழி அறிவை விட ஆசிரியருக்கு, விற்பனை சிப்பந்திக்கு, மக்கள் தொடர்பு அதிகாரிக்கு, மொழி பெயர்ப்பாளருக்கு அதிகம் தேவைப்படும். இது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது.
சுருக்கமாகச் சொன்னால் மனிதர்களுடன் கலந்துரையாடும் வேலைகளுக்கு மொழி அறிவு அதிகம் தேவை. இயந்திரங்களுடன் பணிபுரிவருக்கு அதன் தேவை குறைவு. இந்த விகிதாச்சார அடிப்படையின்படி 80% வேலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட மொழியில் வேலை செய்யும் அறிவு இருந்தாலே போதும். 20%க்கும் குறைவான வேலைகளுக்குத்தான் மொழித்திறன் அதிகம் தேவைப்படுகிறது.
இதனால்தான் சீனர்கள், ஜப்பானியர்கள். கொரியர்கள், ஜெர்மானியர்கள், ரஷ்யர்கள் எல்லாரும் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களில் எந்த சிக்கலும் இல்லாமல் முன்னேறியிருக்கிறார்கள். இந்த ஆதார பலத்திற்கு காரணம் தாய் மொழிக் கல்வி! அத்தனை மொழியியல் மற்றும் உளவியல் ஆராய்ச்சிகளும் இதைத் திரும்ப திரும்பச் சொல்லி வருகின்றன. சிந்தனை மொழி, பேசும் மொழி, கற்கும் மொழி, வேலை செய்யும் மொழி அனைத்தும் ஒன்றாக இருக்கும் பொழுது அது இயல்பான இசைவுத்தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால்தான் இவர்களின் செயல்பாடுகளில் ஒரு தன்னம்பிக்கையும் தெளிவும் உள்ளதைப் பார்க்கலாம்.
அமெரிக்கா உருவாக்க நினைக்கும் ஒரு பன்னாட்டு தட்டை கலாச்சாரத்திற்கு ஆங்கிலம் ஒரு முக்கிய கருவி. நாடுகளை பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தவும் அதன் மொழி கலாச்சாரக் கூறுகளை மட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்தவும் ஆங்கிலம் அவசியமாகிறது. இதனால்தான் கன்னியாகுமரியில் தமிழனாய் பிறந்து பெரும்புதூரில் ஜெர்மானியக் கம்பெனியில் பணிபுரியும் போதும் ஆங்கிலம் அவசியம் என ஆந்திராவை சேர்ந்த மேலாளர் வலியுறுத்துகிறார்.
மெக்காலேவின் திட்டம் பரிபூரண வெற்றி என்று சொல்லலாம். அரசே தாய் மொழி தேவையில்லை, ஆங்கிலம் படியுங்கள் என்று சொல்லும் நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.
சுத்தமாக இந்தியில் மட்டுமே பேசி, ஆங்கிலத்தைக்கூட இந்தியில் படிக்கும் வட இந்திய இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு வேலை கிடைக்கிறது. ஆங்கில வழியில் படிப்பதாகக் கூறும் தமிழ் நாட்டு பொறியியல் மாணவர்களுக்கு தான் வேலைத்திறன் குறைவு. 75% மாணவர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். ஏன்?
புரியாமல் படிக்கும் பாடத்தில் தேர்ச்சி பெறுவது கடினம். செயல்முறைப் படுத்த முடியாத கல்வி தொழிற்சாலைக்கு தேவையில்லை. ஆங்கிலம் தெரியவில்லை என்கிற தாழ்வு மனப்பான்மை மென்திறன்கள் கற்பதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆசிரியர்களும் இந்த உளவியல் சிக்கலை அவிழ்க்க முடியாமல் திணறுகிறார்கள். இது தான் நிதர்சனம்.
பெரிய ஐ.டி. கம்பெனிகள் அள்ளிக்கொண்டு போகும் சில ஆயிரக்கணக்கான மாணவர்களை மட்டும் பார்த்து ஏமாறுகிறார்கள் பெற்றோர்கள்.
அடுத்த 5 ஆண்டுகளில் வரும் தொழில் நுட்பம் பற்றிக் கூறுகையில் ஐ.டி துறைத் தலைவர் ஒருவர் கூறினார்: “ அடுத்த 5 ஆண்டுகளில் என்ன புதிதாக வரும் என்று சொல்ல முடியாது. அந்த புதிய வேலைகள் 60% வரை இருக்கும். அதனால் தற்போதைய திறன்கள் கற்பதை விட முக்கியம் தன்னம்பிக்கையும் மாற்றத்தை எதிர்நோக்கும் மனோபாவமும்.”
கல்வி நிலையங்கள் மாணவர்களிடம் இருப்பதை வளர்ப்பதைக் காட்டிலும் இல்லாததைக் காட்டி பயமுறுத்துகின்றன. தமிழ் வழிக் கல்வி படித்து, தன்னம்பிக்கையுடன் பின் பிற மொழிகளையும் திறன்களையும் படித்தல் எதிர்காலத்தின் எல்லா சவால்களை நோக்குவதற்கும் மாணவர்களை பக்குவப்படுத்தும்.
இந்தியாவின் பன்மொழிக் கலாச்சாரம் குறையல்ல. நம் பலம். பிற மொழியாளருடன் தொழில் ரீதியாக பழக இத்தனை ஆண்டுகள் இல்லாத சிரமம் இப்போது எப்படி வந்தது?
கேரள அன்பர்கள் பிற மொழிகள் கற்றும் தாய் மொழி உணர்வுடன் தன் மக்களைக் கண்டால் சம்சாரிக்கிறார்கள். மராத்திய நாடகம் அப்படியே இருக்கிறது. வங்காளி தன் மொழியை கர்வத்துடன் தூக்கிப் பிடிக்கிறான். கன்னடர்கள் ராஜ்யோத்ஸவா தினம் என்று மாநிலம் பிறந்ததைக் கொண்டாடுகிறார்கள்.
தமிழன் எல்லா வேலைகளையும் பிறருக்கு கொடுத்து விட்டு, “தமிழும் அரை குறை ஆங்கிலமும் அரை குறை” என்று செல்லாக் காசாகி வருகிறான். சென்ற தலைமுறையில் தமிழ் வழி படித்தும் ஆங்கில புலமை, அயல் நாட்டுப் பணி என சிறப்பாக செயல்பட்டவர்கள் நிறைய பேரைச் சொல்லலாம். ஆங்கிலம் படியுங்கள். மாண்டரின் படியுங்கள். அதற்கு முன் உங்கள் தாய் மொழி படியுங்கள்.
எல்லா நேர்காணலிலும் நான் தேர்வுக்கு எனப் பார்ப்பது தன்னம்பிக்கை, எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம், சிந்தனை தெளிவு இவைகளையே. இயல்பாக இவை தாய் மொழியில் வளர்பவை. நாம் நசுக்காவிட்டால் இவை தழைக்கும். ஆங்கில பயத்தில் நம் தமிழ் வேர்கள் மீது கல்வி அமைப்புகள் வெந்நீர் ஊற்றுவதை நிறுத்தட்டும்.
மதிப்பெண்கள் நிறைய கிடைக்கும் என ஆசைப்பட்டு தமிழை பத்தாம் வகுப்பிற்கு மேல் தவற விட்டவன் நான். கல்லூரியில் என் தோழன் மூர்த்தி கல்லூரித் தேர்தலில் நிற்க அரியர்ஸ் தடைகளாய் இருந்தன. அவனுக்கு ஆங்கிலம் சிரமம். அதனால் அவனுக்காக அனைத்தையும் தமிழில் மொழி பெயர்த்து குறிப்புகள் எடுத்து, எளிய ஆங்கிலத்தில் பதில்கள் தயாரித்து அவனை அத்தனை பேப்பர்களிலும் தேற வைத்தேன். என் சிந்தனை தெளிவடைந்ததும், இரு மொழி புலமை வந்ததும், எளிய ஆசிரியப் பயிற்சி முறைகள் கற்றதும் இதனால் தான். நான் முதல் ரேங்க் வாங்க என்றும் மூர்த்தியை காரணமாகச் சொல்வேன். பின் வாசிப்பு மட்டுமே என்னை தமிழுடன் பிணைத்தது.
தேர்தலில் நின்ற மூர்த்தி, பெண்கள் வாக்குகள் இழந்ததால் (நாங்க செஞ்ச அலப்பறை அப்படி) தோற்றது தனிக்கதை!குறைந்தது 2 மொழிகளாவது தேர்ச்சி பெறுதல் இங்கு சாத்தியம். ஒன்றை வைத்து இன்னொன்று கற்கும் சுகம் அலாதியானது! ஒரு ஜோக் உண்டு.
“3 மொழி தெரிந்தவர்களை ஆங்கிலத்தில் என்ன சொல்வோம்?”
Tri-lingual.
“2 மொழி தெரிந்தவர்களை ஆங்கிலத்தில் என்ன சொல்வோம்?”
Bi-lingual.
“ ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர்களை என்ன சொல்வோம்?”
American.
தமிழனுக்கும் நாளைய சரித்திரத்தில் இப்படி ஒரு அவப்பெயர் வர வாய்ப்புள்ளது.

தி இந்து ஜனவரி 29 நாளிதழில் அனக்காவூர் பள்ளி/ சுவரெல்லாம் பாடங்கள் / திருமதி.தேன்மொழி தலைமையாசிரியை மற்றும் திருமதி கிரிஜா ஆசிரியை அவர்களுக்கு வாழ்த்துக்கள்

ஆசிரியர் இடமாறுதலுக்கு வெளிப்படையாக விலை நிர்ணயம் - TATA

பள்ளி மாணவர்களுக்கு புத்தகத்துக்கு பதில் டேப்லட் கல்வி முறை: பிரிட்டிஷ் கவுன்சில், டிசிசி நிறுவனம் ஏற்பாடு


 பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான ‘டேப்லட் கல்விமுறையை’ அறிமுகப்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் டிசிசி நிறுவனம் (தி கரிக்குலம் கம்பெனி) இணைந்து பள்ளி மாணவர்களுக்கு, புத்தகத்திற்கு பதில் ‘டேப்லட்டில் கல்வி கற்கும் முறையை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்கும் நிகழ்ச்சி சென்னை பிரிட்டிஷ் கவுன்சிலில் நேற்று நடைபெற்றது. இதில், பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குனர் பால் செல்லர்ஸ், இணை இயக்குனர் நிருபா பெர்னான்டஸ், டிசிசி நிறுவன நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உஜ்வல் சிங், இணை நிறுவனர் ஜனகா புஷ்பானந்தம், ஸ்ரீ பாலவித்யாலயா பள்ளி தாளாளர் சந்தானலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குனர் பால் செல்லர்ஸ் பேசுகையில், “ ஆங்கில கல்வி வளர்ச்சியில் பிரிட்டிஷ் கவுன்சில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், டிடிசி நிறுவனத்துடன் இணைந்து பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்கவும், புத்தக சுமையை குறைக்கவும் இந்த டேப்லட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல், கணக்கு போன்ற பாடங்களை படிக்க முடியும். சென்னையில் முதல் முறையாக பெரம்பூரில் உள்ள ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் இந்த டேப்லட் கல்வி முறை தொடங்கப்பட்டுள்ளது“ என்றார். 

டிசிசி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உஜ்வல் சிங் பேசுகையில், “ மாணவர்களின் சுமையை குறைப்பதற்கும், கல்வியை எளிதாக்கவும் இந்த டேப்லட் கல்விமுறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த டேப்லட்டின் விலை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை. பள்ளியில் மாணவர்களுக்கு டேப்லட்டும், ஆசிரியருக்கு மடிக்கணிணியும் வழங்கப்படும். மடிக்கணிணி மூலம் ஆசிரியர் மாணவர்களின் டேப்லட்டை கட்டுப்படுத்தலாம். பள்ளியில் இணைய இணைப்பு வழங்கப்படும். அதில் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் அனுமதிக்கும் இணைய தளங்களையே பார்க்க முடியும். 

அதே வேளையில் வீட்டிலும் ஆப்-லைன் மூலமாக பாடங்களை படிக்கலாம். சென்னையை சேர்ந்த 50 பள்ளிகள் அடுத்த ஆண்டு முதல் தங்கள் பள்ளிகளில் இந்த டேப்லட் கல்விமுறையை அமல்படுத்த எங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்“ என்றார். நிகழ்ச்சியின் இறுதியில், டேப்லட்டை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியை ப்ரீத்தி ஆகியோர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.