Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 9 September 2014

உலக சராசரியைவிட இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் குறைவு: ஆளுநர்

100 சதவீத எழுத்தறிவு நிலையை எட்ட தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறபோதும், உலக சராசரியுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதம் இப்போதும் குறைந்தே காணப்படுகிறது என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கவலை தெரிவித்தார்.
சென்னை தமிழக ஆளுநர் மாளிகையில் சர்வதேச எழுத்தறிவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், வயது வந்தோர் கல்வித் திட்டம் மூலம் பயனடைந்து, அதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற 2 பெண்கள், 3 திருநங்கைகளுக்கு சான்றிதழ்களை வழங்கி ஆளுநர் ரோசய்யா பேசியது:
வறுமையை ஒழிப்பதிலும், குழந்தை இறப்பைக் குறைப்பதிலும், மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும், ஆண்-பெண் சமநிலையை உருவாக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதிலும், அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் மிக முக்கியப் பங்காற்றுவது எழுத்தறிவு.
இதைக் கருத்தில்கொண்டே, மத்திய, மாநில அரசுகள் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம், கடந்த 1991-ஆம் ஆண்டில் 52.2 சதவீதமாக இருந்த இந்தியாவின் எழுத்தறிவு விகிதம், 2011-இல் 73 சதவீதமாக உயர்ந்தது. இப்போது 100 சதவீதத்தை எட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும், உலக சராசரியோடு ஒப்பிடும்போது, இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இந்த நிலையை மாற்ற தன்னார்வ அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு, ஒன்றிய பிரதிநிதிகளும், மாவட்ட நிர்வாகம், கல்வி அதிகாரிகளோடு கைகோர்த்து கல்வியைப் பரப்புவதிலும், பள்ளி இடைநிற்றலைத் தடுப்பதற்கும் உதவ வேண்டும்.
ஆரம்பக் கல்வி மாணவர் சேர்க்கைக்கும், இடநிலைக் கல்வி மாணவர் சேர்க்கைக்கும் மிகப் பெரிய இடைவெளி இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஆரம்பக் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 98 சதவீதமாக இருக்கும் நிலையில், இடநிலைக் கல்வியில் சேர்க்கை விகிதம் 57 சதவீதம் என்ற அளிவில் மட்டுமே இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
மேலும், 81.5 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கே வராமல் இருப்பதாகவும், அவர்களில் மாற்றுத்திறனாளிகள் 34.12 சதவீதம் என்றும் விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஒவ்வொரு எழுத்தறிவு பெற்ற நபரும், எழுத்தறிவு இல்லாத பெற்றோர், குழந்தைகளிடையே கல்வியின் அவசியம் குறித்து பரப்ப முன்வரவேண்டும். அப்போதுதான் நாட்டின் எழுத்தறிவு பெற்றவர்களின் விகிதம் உயரும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சபிதா, மாநில எழுத்தறிவு இயக்க ஆணையத்தின் உறுப்பினர் செயலரும், மாநில அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குநருமான பூஜா குல்கர்னி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

No comments:

Post a Comment